நாளை காலை பிரசாத் ஸ்டூடியோ செல்கிறார் இளையராஜா!

1976 ஆம் ஆண்டு முதல் இசைஞானி இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ஒரு சிறிய பகுதியில் உள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் தனது திரைப்பட இசையமைப்பு பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில், அந்த இடத்தை காலி செய்வது தொடர்பாக பிரசாத் ஸ்டூடியோ தற்போதைய நிர்வாகிகளுக்கும் இளையராஜாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே பிரச்னை இருந்துவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு,இளையராஜா பணியாற்றி வந்த ஸ்டூடியோ காலி செய்யப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டதாக பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதை கண்டித்து திரையுலக பிரமுகர்களால் சில போராட்டங்களும், பேச்சு வார்த்தைகளும் நடந்தது.ஆனால் தீர்வு எட்டப்படாமலே இருந்து வந்தது.இந்நிலையில், தனது இசைப்பொருட்கள், இசைக்கோப்புகள், மின்னணு சாதனங்கள் உள்ளே இருப்பதாகவும் அவை பாழாகிவிடும் என்பதால் ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் இளையராஜா ராஜா வழக்கு தொடர்ந்தார்.

மேலும், தன்னை ஸ்டூடியோவில் தியானம் மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இவ்வழக்கின் விசாரணையின் போது “பொருட்களை எடுத்துச்செல்ல எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இந்த வழக்கு தொடர்பாக பிரசாத் ஸ்டூடியோ தரப்பு, இசையமைப்பாளர் இளையராஜாவை சில நிபந்தனைகளுடன் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயார் ஆனால்,பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது, ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகள் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா கோர்ட்டில் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி நாளை காலை 9 மணிக்கு  இளையராஜா தனது வழக்கறிஞர்களுடன் பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன