ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினிகாந்த், தனது அரசியல் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிக்கை வெளியிட்டார்.இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் பின்னணியில் லதாரஜினிகாந்த் பெயர் கூட அடிபட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..இது ஒருபுறம் இருக்க ,நடிகர் ராகவாலாரன்ஸ் ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு, தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது. “ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கோரி,சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் என்னையும் பலர் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தனர்.. இயக்குனர் சாய் ரமணி மூலம் வந்த பலரது ஆடியோ குறிப்புகளையும் நான் கேட்டேன், இப்போது கூட பலரும் ரஜினிகாந்தை தனது முடிவை மாற்றுமாறு கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்தே நான் இப்போது இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.தலைவருடைய (ரஜினி) முடிவின் காரணமாக நீங்கள் அனைவரும் அடைந்துள்ள அதே வேதனையை நானும் அடைகிறேன். தலைவர் வேறு ஏதேனும் காரணங்களை கூறியிருந்தால்,நானும் அவரிடம் அந்த முடிவை மறுபரிசீலனை செய்யும் படி கோரியிருக்கலாம், ஆனால் தலைவர் சொன்ன முக்கிய காரணம் அவரது உடல்நிலைதான். நாம் அவரிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர் மீண்டும் தனது முடிவை மாற்றிக்கொண்டால், அதனால் அவருக்கு ஏதேனும் நேர்ந்தால், நாம் அனைவரும் அந்த குற்ற உணர்ச்சியுடன் தான் வாழ்நாள் முழுவதும் நாம் வாழ வேண்டும். அரசியலுக்கு வராமல் கூட, அவர் எப்போதும் என் குருவாகவே இருப்பார். நான் அவருடன் நெருக்கமாக பேசுவதால் அவரது உடல்நிலை பற்றி எனக்குத் தெரியும். இப்போது, நாம் செய்ய வேண்டியது அவருடைய நல்ல ஆரோக்கியத்துக்காகவும் அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவர் எப்போதும் என் பிரார்த்தனையில் நிலைத்திருப்பார். குருவே சரணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளதாவது,”நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம். இன்று நான் ஒரு முக்கியமான அறிக்கையை அழுத்தமாகச் சொல்ல நினைக்கிறேன். இனிமேல், நான் வெளியிடும் எனது பதிவுகள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே, அதில், எனது குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்புபடுத்தவே மாட்டேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதோ கெட்டதோ என்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.அதற்கும் எனது குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் எந்த தொடர்பும் இருக்காது. “கல்லால் அடிச்சா காயம் ஆறிடும். ஆனால் சொல்லால் அடிச்ச காயம் ஆறாது என தமிழில் ஒரு பழமொழி உண்டு.” ஓரு குறிப்பிட்ட குரூப் ரொம்ப அடிச்சிட்டாங்க. அவற்றை நான் மன்னிக்கவும் மறக்கவும் முயற்சிக்கும்போது கூட, சில வார்த்தைகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. யார் அதை மறந்தாலும், அந்த வார்த்தைகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். காலம்,நேரம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்”.என பதிவிட்டுள்ளார்.