நடிகர்கள் : ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், சிஜாரோஸ்
இயக்குனர் : இரா.சரவணன்
ஒளிப்பதிவு : வேல்ராஜ்
இசை : டி.இமான்
சமூக அக்கறை, பெண் கதாபாத்திரங்கள் இவைகளை தொடர்ந்து முன்னிலை படுத்தி, திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம் சூர்யாவின், ‘2டி என்டர்டெயின்மெண்ட்’.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘அமேசான் பிரைம் ஒடிடி’ தளத்தில் வெளியாகியிருக்கும் படம், ‘உடன்பிறப்பே’. இது ஜோதிகா நடித்துள்ள ’50’ வது படம். ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கியுள்ளார்.
உடன்பிறந்த அண்ணன் சசிகுமாருக்காக தன் உயிரைக் கூட விட்டுவிடும் அளவிற்கு பாசமான தங்கச்சி (மாதங்கி) யாக ஜோதிகா. அதுபோலவே அண்ணன் சசிகுமாரும். இந்த இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு அவ்வளவு சாதாரணமானது அல்ல. மாதங்கியின் கணவன் ‘சற்குணம்’ அதிர்ந்து பேசாத அன்பான சமுத்திரக்கனி. இந்த மூவருக்குள்ளும் நடக்கும் உணர்வுகளின் போராட்டமே ‘உடன்பிறப்பே’ படத்தின் கதை.
இக்கட்டான சூழலில் ஒரு பெண்ணின் பேறுகாலச் செலவுக்காக (ஜோதிகா) மாதங்கி தனது தாலியைக் கழட்டி கொடுத்து பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றும் காட்சியில் புதுக்கோட்டை மக்களின் மனதில் மாதரசியாக உயர்ந்து நிற்கிறார். காலகாலமாக தமிழ் சினிமாவுக்குள் சிறைப்படுத்தி வைத்திருந்த ‘தாலி சென்டிமென்டு’க்கு விடைகொடுத்துள்ளார். புரட்சிப் பெண்ணாக அந்தக்காட்சியில் அவர் பேசும் வசனம் சிந்திக்க வைக்கும் சிறப்பான வசனம்.இயக்குநர் ஆர்.சி.சக்தியின் உள்ளத்தில் அன்றொருகாலத்தில் உயர்ந்து நின்றவர் நடிகை லட்சுமி .இன்று ஜோதிகா.மூடக்கருத்துகள் நொறுக்கப்படுகிறது. மோஸ்ட் வெல்கம் ஜோ !
சோகத்தில் பெரும் சோகம் புத்திர சோகம். அந்த சோகம் எனது அண்ணனுக்கு வந்துவிடக்கூடாது என எண்ணி, அந்த சோகத்தை தனதாக்கி கொள்ளும்போது நெஞ்சு கன க்கிறது. கல் நெஞ்சக்காரன் மனதிலும் கண்ணீர்!பாறையை உடைக்கும் வலிமை கண்ணீருக்கு மட்டுமே இருக்கிறது.
இந்தப்பக்கம் அண்ணன், அந்தப்பக்கம் கணவன் யாருக்காக யாரை விட்டுக்கொடுப்பது? இவர்களுக்கிடையில் சிக்கி கொண்ட ஜோதிகாவின் நடிப்பு அபாரம். அவர் பேசும் வசனங்களை விட, கண்கள் காட்டும் அசைவுகள் வீரியமாக இருக்கிறது.வேல்விழி என்பது இதற்காகத்தானோ? காதல் ,கனிவு இரண்டும் விழி வீச்சில் மட்டுமே முழுமை பெறும்.!
ஒரு சில நடிகர், நடிகைகள் மட்டுமே இயக்குனர்களுக்கு நடிப்பின் மூலம் சவால் விடுவார்கள். ஜோதிகாவும் அப்படிபட்டவர் தான்.
சசிகுமாரின் ஓப்பனிங் சீனே சிறப்பான சீன். அவருக்கே உரித்தான காட்சியமைப்புகள். அடிதடி ஏரியாவில் அமர்க்களப்படுத்தும் அவர், தங்கச்சிக்காக உருகும் காட்சியில் கண் கசியவும் வைக்கிறார்.
ஆசிரியராக வருகிறார். வழக்கமான சமுத்திரக்கனி தான், ஆனால் சாஃப்ட்! ஹெல்மெட் போடச்சொல்வதின் அவசியம் முதல் பல்வேறு சமூக கருத்துகளை அவர்மூலம் அழகாக சொல்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.
காமெடிக்காக சூரி, சிரிக்க வைக்கிறார். போலீஸ் கைது செய்யும் காட்சியில் ‘எப்பவுமே சாப்ட்டுப் போ.. சாப்ட்டுப் போ..ன்னு சொல்லுவே.. இன்னிக்கி நீ ஓட்டல்ல போயி சாப்புடுன்னு சொல்லும் போதே எனக்கு புரியாம போயிடுச்சுன்னு’ ஜோதிகாவிடம் பேசும் காட்சியில் குணச்சித்திர நடிகராக தெரிகிறார்.
திருவிழாக் கூட்டத்தினையும், காட்சிகளையும் பிரம்மாண்டப் படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இன்ஸ்பெக்டர் வேடத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.
அண்ணன், தங்கச்சி சென்டிமென்ட்டை வைத்து பெண்களுக்கான ஒரு பொழுது போக்கு படத்தினை கொடுத்துள்ளார், இயக்குனர் இரா.சரவணன். குடும்பத்துடன் பார்க்கலாம்!