ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, ‘சித்திரைச் செவ்வானம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தின் கதையை இயக்குனர் விஜய் எழுதியிருக்க, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்டண்ட் சில்வா.
இதில் சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘சித்திரைச் செவ்வானம்’ எப்பிடியிருக்கிறது?
சமுத்திரக்கனி தன்னுடைய மகள் பூஜா கண்ணனை எப்படியாவது ‘டாக்டர்’ ஆக்கிவிட நினைக்கிறார். இதனால் ‘நீட்’ பயிற்சிக்காக தன்னுடைய கிராமத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள டவுனில் இருக்கும் ‘நீட்’ பயிற்சி மைய்யத்தில் தங்கி படிக்க சேர்த்து விடுகிறார்.
‘நீட்’ பயிற்சி மைய்யத்தில் மாணவர்களுடன் ஏற்படும் ஒரு மோதலில், பூஜா கண்ணன் குளிக்கும் வீடியோ, திருட்டுத் தனமாக எடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்நிலையில் பூஜா கண்ணன் மாயாமாகிறார். அப்பா சமுத்திரக்கனி ஒருபுறமும், ரீமா கல்லிங்கல் தலைமையில் போலீஸூம் தேடுகிறது. அவர் கிடைத்தாரா, இல்லையா? என்பது தான் படத்தின் மொத்தக் கதையும்!
சமுத்திரக்கனி அப்பாவாக வழக்கமான நடிப்பினில் நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மிகைப் படுத்தப்பட்ட நடிப்பு! அவருடைய மனைவி வித்யா பிரதீப், ‘பலி’ கொடுப்பதற்காகவே படைக்கப்பட்ட கதாபாத்திரம்! மழை விழும் நேரத்தில் மோட்டாரை ஆஃப் செய்யப் போகும்போதே, தெரிந்து விடுகிறது.
சிறுமி மானஸ்வி கொட்டாச்சி, அலட்டலில்லாத அழகான நடிப்பின் மூலம் மனம் கவர்கிறார். ‘அம்மா இறந்த அடுத்த சில நாட்களில், வீட்டை சுத்தப்படுத்தி முறைப்படுத்தும்’ காட்சியில், கண்கலங்க செய்கிறார். ”இதையெல்லாம் நீ ஏம்மா செய்யுற..’ என வாரி அணைத்துக் கொள்ளும் சமுத்திரக்கனி அப்பாவாகவே நிற்கிறார். இருவருக்குமான இந்தக்காட்சி படத்தின் ‘ஹைலைட்’. உயிரோட்டமான காட்சி. (காட்சி, நடிப்பு, வசனம் மூன்றும் உயர்ந்து நிற்கிறது.)
நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், அறிமுகமாகும் முதல் படத்திலேயே சவாலான கதாபாத்திரம் ஏற்றுள்ளார். குறை சொல்ல முடியாத எதார்த்தமான நடிப்பு.
போலீஸ் அதிகாரியாக வருகிறார் ரீமா கல்லிங்கல். அவருடைய விசாரணையில் எந்த விதமான பரபரப்போ, விறுவிறுப்போ இல்லை. ஆனால் ஒரு சிறுமியை, அவள் பள்ளிக்கு சென்று விசாரணை செய்யும் போது இடம் பெறும் வசனம் இளம் பெண்களுக்கு தைரியம் கொடுக்கும்.
அரசியல்வாதியாக, இயக்குநர் சுப்பிரமணிய சிவா நன்றாக நடித்திருக்கிறார். ஒரே சீன் தான் என்றாலும் ஆக்கிரமித்துள்ளார். நடிக்கத் தெரிந்த நடிகர்.
மனோஜ் பரமஹம்சா, கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை, படத்திற்கு பொருந்தவில்லை!
ஸ்டண்ட் சில்வா, இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கவனிக்கதக்க இயக்குனராகி இருப்பார்!