மாட்டுக்கறி பிரச்சனையால் தாத்தாவிடம் வளரும் பெற்றோரை இழந்த சிறுவன், பன்றிக்கறி பிரச்சனையால் தாத்தாவையும் இழக்கிறான். ஏன், எப்படி? என்பது தான், சேத்துமான் படத்தின் கதை.
மூங்கில் கூடை விற்று பிழைப்பு நடத்தும் பூச்சியப்பா கதாப்பாத்திரத்தில் அப்பாவி தாத்தாவாக நடித்திருக்கும் மாணிக்கமும், அவரது பேரனாக நடித்துள்ள சிறுவன் அஸ்வினும் மனதை நெகிழச்செய்கின்றனர். கதாபாத்திரங்களுக்கேற்ற அருமையான தேர்வு. சில இடங்களில் அவர் பேசும் வசனங்கள் பேசு பொருளாகின்றது. தனது பேரனை எப்படியாவது படிக்க வைத்து விடவேண்டும் என்ற நோக்கில் சகித்துகொள்ளும் காட்சிகளும், பயம் கொள்ளும் காட்சிகளிலும் சிறப்பான பங்கினை கொடுத்துள்ளார்.
வெள்ளையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசன்னாவும், அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாவித்ரியும் ரசிகர்களை சோர்வடையச் செய்யாமல் பார்த்து கொள்கிறார்கள். இந்த இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல்கள் சிரிப்பையும், சிந்திப்பையும் வரவழைக்கிறது. இவர்கள் கொங்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் கதைக்களத்திற்கு மிகச்சரியாக பொருந்தி இருக்கிறார்கள். இருவருமே பல யூடிப் சேனல்களில் நடித்து பெரிய ரசிகர் கூட்டத்தினரை வைத்திருப்பவர்கள். அது படத்திற்கு பெரிய பலம்.
ஒவ்வொரு காட்சிகளையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா. பன்றிக்கறி சமைக்கும் காட்சிகள், இதுவரை பன்றிக்கறி சாப்பிடாத அசைவ பிரியர்களை சுண்டி இழுக்கும். ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் கைகோர்த்த இடம்.
பிந்து மாலனியின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.
தேவையற்ற காட்சிகள் இருக்கிறது. அந்த நீளமான காட்சிகளை தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
வர்ண முலாம் பூசப்படாத சேத்துமானை உருவாக்கியதற்கு இயக்குனர் தமிழைப் பாராட்டலாம்.