‘டைரி’ – விமர்சனம்!

 

‘5 ஸ்டார்’  நிறுவனம் சார்பில் கதிரேசன் தயாரித்து, அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், இன்று வெளியாகி இருக்கும் படம் டைரி. இதில் அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, ஜெயப்பிரகாஷ், கிஷோர், சாம், ஷாரா, நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘டைரி’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. அதை பூர்த்தி செய்து உள்ளதா? பார்க்கலாம்.

பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் அருள்நிதி, தன்னுடைய அசைன்மென்ட்டுக்காக சுமார் 16 வருடங்களுக்கு முன்னர், ஊட்டியில் நடைபெற்ற  கொலை, கொள்ளை சம்பவத்தை புலன்விசாரணை செய்ய செல்கிறார். அங்கு விசாரணையில், ஊட்டியின் ஒரு ஒரு குறிப்பிட்ட பகுதியில் சில அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கிறது. அந்த அமானுஷ்யத்தை நெருங்கும் போது அவருடைய உயிர் பறி போகும் சூழ்நிலையில், ஒரு பஸ்ஸூக்குள் மாட்டிக் கொள்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் டைரி படத்தின் கதை, திரைக்கதை.

படத்தின் ஆரம்பம் விறுவிறுப்பாக இருந்தாலும் காட்சிகள் செல்ல.. செல்ல.. சற்றே சோர்வைத் தருகிறது. மைய்யப் பாதையை விட்டு விலகிச்செல்லும் திரைக்கதை, மீண்டும் இடைவேளைக்குப் பிறகு தான் சரியாக செல்கிறது.. அதிலும் ப்ரிக்ளைமாக்ஸ், க்ளைமாக்ஸ் காட்சிகள் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. அடுத்த பாகத்திற்கும் அடித்தளம் போட்டு இருக்கிறார், இயக்குனர். புதிய கோணத்தில் கதையை சிந்தித்த அவர், திரைக்கதையில் சிந்திக்கவில்லை.

இயக்குனர் இன்னாசி பாண்டியன், கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலும், கதாபாத்திர வடிவமைப்பிலும் இயக்குனர் இன்னும் சரியாக செய்திருக்கலாம்.. கதாபாத்திர வடிவமைப்பில், குறிப்பாக கம்பீரமான ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டரான பவித்ரா மாரிமுத்துவை, அவரது டிரைவர் சாம்ஸ் கிண்டல் செய்யும் காட்சிகள். அதேபோல் முக்கால் வாசி படத்தில் நடித்திருக்கும் ஷாராவால் காட்சிகளை நகர்த்த முடியவில்லை. அவரது மொக்கை ஜோக்குகளும், இரட்டை அர்த்த வசனங்களும் படத்தின் மொத்த பலவீனம்.

அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்திற்கு  அவரது நடிப்பின் மூலம் கம்பீரம் கொடுத்துள்ளார். அவரைப்போலவே பவித்ரா மாரிமுத்து, ஜெயப்பிரகாஷ், கிஷோர், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட சில புது முகங்களும் நன்றாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு சிறப்பு. இசை பரவாயில்லை.

சூப்பர் நேச்சுரல், க்ரைம், த்ரில்லர் வகைப் படங்களை பார்ப்பவர்களுக்கு ‘டைரி’ பிடிக்கும்!