காலங்கள் கடந்த நிலையில் சுந்தர சோழன் (பிரகாஷ் ராஜ்) நோய்வாய்பட்டு ஓய்வெடுக்கும் சூழல் வருகிறது. இதனால் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), அருண் மொழிவர்மன் (ஜெயம் ரவி) இருவரும் வெவ்வேறு திசைகளில் போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாண்டிய மன்னன், வீரபாண்டியனுடன் (நாசர்) போர் தொடுக்கிறார் ஆதித்த கரிகாலன் (விக்ரம்). அந்தப்போரின் போது மறைவிடம் தேடி தனது காதலி நந்தினி (ஐஸ்வர்யா ராய்) வீட்டினுள் மறைந்து கொள்கிறார், வீரபாண்டியன் (நாசர்). அந்த இடத்தை தேடி வரும் ஆதித்த கரிகாலன் அங்கு தனது காதலியை கண்டு பெரும் அதிர்ச்சியடைகிறார். ஆத்திரத்தின் உச்சமடையும் அவர் வீரபாண்டியனை கொல்கிறார். இதனால் பெரும் கோபமடையும் நந்தினி (ஐஸ்வர்யா ராய்), சுந்தரசோழரின் நிதியமைச்சர் பெரிய பழுவேட்டரையரை (சரத்குமார்) கல்யாணம் செய்து கொண்டு பழிவாங்க காத்திருக்கிறார்.
இதனிடையே சுந்தர சோழனுக்குப் பிறகு ஆட்சியில் அமரத்துடிக்கிறார், மதுராந்தகன் (ரகுமான்). இவர் சுந்தர சோழரின் சித்தப்பாவின் மகன். பல திசைகளில் இருந்தும் சோழ தேசத்தை கைப்பற்ற சதி நடக்கிறது.. அந்த சதியின் மையப்புள்ளியாக இருக்கிறார், நந்தினி (ஐஸ்வர்யா ராய்). இதை எல்லாம் தன் அண்ணன் அனுப்பிய வந்தியத்தேவன் (கார்த்தி) மூலமாக தெரிந்து கொள்கிறார் குந்தவை (த்ரிஷா). இதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் கதை.
இயக்குனர் மணிரத்னம், கல்கியின் கதாபாத்திரங்களுக்கேற்ற வகையில் நடிகர்களை தேர்ந்தெடுத்து இருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கின்றனர்.
த்ரிஷா, அழகும் புத்தி கூர்மையும் கொண்ட சோழப்பேரரசின் இளவரசி குந்தவையாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் படையப்பா ரஜினியின் அழகையும், ஸ்டைலையும் வர்ணிப்பதை போல் த்ரிஷாவின் அழகினை ரசிகர்கள் வர்ணிக்கின்றனர். அவரைப்போலவே ஐஸ்வர்யா ராய் ஜொலிக்கிறார். படமெடுத்து ஆடும் பாம்பினைப் போல் அவரது அழகு!
பெரிய பழுவேட்டரையராகவும் நந்தினியின் கணவராகவும் நடித்திருக்கிறார் சரத்குமார். சரத்குமாரின் திடகாத்திரமான தோள்கள் அவரது கதாபாத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. அதேபோல் சின்ன பழுவேட்டரையராக நடித்திருக்கும் பார்த்திபன் பார்வையிலேயே ‘சதிகார’ நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.
சர்ப்ரைஸாக அடித்து தூள் கிளப்பியிருப்பவர் நந்தினியின் சகோதரனாக வரும் ஆழ்வார்க்கடியானாக நடித்திருக்கும் ஜெயராம்! அவரது தனிபட்ட நடையே அவரது கதாபாத்திரத்தை அனைவர் மனதிலும் நிலை கொள்ளச் செய்கிறது. அந்தபாத்திரத்தை வடிவமைத்தவருக்கு பாராட்டுக்கள்!
இளவரசர்களாக இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில், பலத்திற்காக விக்ரம் என்றால், அழகுக்காக ஜெயம்ரவி. இருவருமே மாஸ்!
வித்தியாசமேயின்றி பார்க்கும் பெண்கள் எல்லோரிடமும் ஜொள்ளு விடும் வந்தியத்தேவனாக கார்த்தி! த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி இவர்களுடனான காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள் சூப்பர்.. பெர்ஃபெக்ட்!
பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம்பிரபு என, அனைவருமே சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
நாவலை பற்றி தெரிந்திராதவர்களுக்கு படத்தின் முதல் பாதி சற்று குழப்பத்தை ஏற்படுத்தும். கதாபாத்திரங்களை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இரண்டாம் பாதி விறுவிறுப்பினையும், சுவாரஸ்யத்தினையும் ஏற்படுத்துகிறது. நல்ல கிளைமாக்ஸ் டிவிஸ்ட்!
உலகத்தரத்திலான ஏ.ஆர். ரஹ்மான் இசையும், ரவிவர்மன் ஒளிப்பதிவும் ஜாலம் செய்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்..
தோட்டா தரணியின் அரண்மனையின் செட்டுகள், அசரடிக்கிறது.
நாவலில் இருந்து சினிமாவுக்கு மாற்ற முடியாத பல சவாலான கல்கியின் பக்கங்களை சாமார்த்தியமாக தவிர்த்திருக்கிறார், இயக்குனர் மணிரத்னம்.
மற்றபடி குறைகள் எதுவும் பெரிதாக இல்லை!
பொன்னியின் செல்வன் – மணிரத்னத்தின் மாயாஜாலம்!