மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொலைபேசி வழியே இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளையராஜாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தன்னுடைய வாழ்த்துச்செய்தியில், “ஆழமான பக்தி மற்றும் இசை மீதான அர்ப்பணிப்பின் மூலம் கோடிக்கணக்கான நெஞ்சங்களை வென்றுள்ளீர்கள்.இசை மீதான உங்களின் அசாதாரணமான பங்களிப்பு என்றும் தேசத்தின் பாரம்பரியமாக விளங்கும். உங்களின் மிகச்சிறந்த குணம் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடம். நீண்ட ஆரோக்கியத்துடன் இசைக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், காலைப் பொழுது இனிதாய் மலர – பயணங்கள் இதமாய் அமைய – மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற – துன்பங்கள் தூசியாய் மறைய – இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு ‘இசைஞானி’ இளையராஜா!
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!
அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை ‘இசைஞானி’ எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.
இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக – உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.
எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து! இவ்வாறு அவர் கூறியுள்ளார்
“மொழி கடந்து
தேசம் கடந்து
கோடிக்கணக்கான
இதயங்களை தாலட்டி
அரை நூற்றாண்டாக
இசை மழையால்
ஆட்சி செய்துகொண்டிருக்கும்
என் உயிர் தோழனுக்கு
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.இவ்வாறு பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்