லண்டனில் இருக்கும் ஒரு பிரமாண்டமான புராதன மேன்சனில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் விமலா ராமன், தனது சகாக்களுடன் ஆராய்ச்சி செய்து வருகிறார், அப்போது மர்மமான முறையில், தனது சகாக்களை கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொள்கிறார். போலீஸ், இறந்தவர்களின் உடலை கைப்பற்றுகிறது. ஆனால், விமலா ராமனின் உடல் மட்டும் கிடைக்கவில்லை! அமானுஷ்யமான இந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த மேன்சன், மக்கள் பயன்பாடின்றிக் கிடக்கிறது.
இப்படியான, அமனுஷ்யமான சம்பவங்களை வீடியோ எடுத்து வரும் வசந்த் ரவி தலைமையிலான ஒரு யூடியூப் குழு, அந்த மேன்சனுக்குள் நுழைகிறது. அப்போது நடக்கும் அமானுஷ்யமான விஷயங்கள், அவர்களுக்கு மட்டுமின்றி படம் பார்ப்பவர்களுக்கும் மரண பயத்தை காட்டுகின்றது.
27 நட்சத்திரங்களின் வரிசையில் முதலாவதாக வரும் நட்சத்திரம் ‘அஸ்வினி’ நட்சத்திரம். இந்த அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான ‘அஸ்வினி’ குமாரர்களை முன்னிறுத்தி கதை சொல்லியிருப்பது சினிமாவிற்கு புதிது. ‘அஸ்வின்ஸ்’ கதைக்கு பொருத்தமான தலைப்பு. அதோடு, க்ளைமாக்ஸில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்கள். பிர்லியண்ட் க்ளைமாக்ஸ்!
விவசாயி, அவரது இரண்டு மகன்கள், அஸ்வினி குமாரர்கள் இவர்களை பற்றிய இன்ட்ரோ முடிந்த பின்னர், காட்சிக்கு காட்சி திகில் தான். படம் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் பயமும், பீதியும் ஒருசேர வருகிறது. தில் இருந்த தனியாக பார்க்க முடியுமான்னு? சவால் விடுகிற லெவலில் இருக்கிறது.
அஸ்வின்ஸ் படத்தில் நடித்த வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தரமணி, ராக்கி படங்களை போன்றே வசந்த் ரவிக்கு இந்தப்படமும், வித்தியாசமாக அமைந்திருக்கிறது. ஒரு சைக்காலாஜிக்கல் ஹாரர் த்ரில்லருக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். மேன்சனுக்குள் நுழையும் போது வித்தியாசமான அனுபவத்தை அவர் முகத்தில் காட்டும்போதே நமக்கு பயம் ஏற்பட்டு விடுகிறது. அனைத்து உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
அஸ்வின்ஸ், சவுண்ட் எஃபெக்ட்ஸில் ஹாலிவுட் தரத்திற்கு சவால் விடும் தரமான படம். விஜய் சித்தார்த்தின் பின்னணி இசை, படத்தின் மிகப் பெரிய பலம். பின்னணி இசையோடு எட்வினின் ஒளிப்பதிவு சேர்ந்து கொண்டு மிரட்டுகிறது.
மொத்தத்தில், ஹாரர் பிரியர்கள், தியேட்டரில் சென்று பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்!
பலவீனமானவர்கள், துனணயுடன் செல்வது நல்லது!