நிகழ்வில் நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இந்த படம் எல்லாருக்குமே ஸ்பெஷல். எஸ்ஆர் பிரபு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கு என்று என்னை அழைத்தபோது, அவரே இப்படி சொன்னால் நிச்சயமாக அதில் நடித்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்டது. 15 நிமிடம் கதை கேட்டதுமே உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க எல்லா நடிகர்களும் விரும்புவார்கள். முழு கதையையும் நான் படிக்கவில்லை.. அதேபோல இன்னும் படமும் பார்க்கவில்லை.. ஜஸ்டின் பிரபாகரன் பாடல் உருவாக்கும் காட்சியை நேரில் பார்த்து பிரமித்தேன். ஒளிப்பதிவாளர் கோகுல் படப்பிடிப்பு தளத்தில் அதிகம் பேசாமலேயே அனைவரிடமும் வேலை வாங்கியதை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அக்டோபர் எனக்கு ரொம்ப பிடித்த மாதம். காரணம் என் தாத்தாவின் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) பிறந்தநாள் அக்டோபர் 1ஆம் தேதி தான் வருகிறது. என் மனைவியின் பிறந்த நாளும் அக்டோபர் 6ஆம் தேதி தான். இந்த படமும் அக்டோபர் 6ல் தான் வெளியாகிறது. அதனால் உனக்காகத்தான் இந்த படமே என்று சொல்லி அவரை குளிர்வித்து விட்டேன். என்னை ஒரு நடிகராக தொடர்ந்து நிலைநிறுத்த உதவி வரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கு எனது நன்றி” என்று கூறினார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, “பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் உருவாக்கும் ஒவ்வொரு படமும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறோம். யுவராஜ் மென்மையாக பேசக்கூடியவர். ஒரு குழந்தை மாதிரி என்று சொல்லலாம். மல்டி ஸ்டார் படம் தயாரிப்பது என்பது ஒரு தயாரிப்பாளருக்கு கஷ்டமான விஷயம். யாருடைய மனமும் கோணாமல் படத்தை எடுக்க வேண்டும். அதை இறுகப்பற்று படத்தில் அழகாக செய்து இருக்கிறார் இயக்குநர் யுவராஜ். இந்த படம் பற்றி பெரிதாக வெளியே யாருக்கும் தெரியாத நிலையில் என்னை பார்க்கும் திரை உலகை சேர்ந்த பலரும் இந்த படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டோமே என்று பாராட்டினார்கள். அப்புறம் தான் அதன் பின்னணியில் எடிட்டர் மணிகண்டன் பாலாஜி இருக்கிறார் என்பது தெரிய வந்தது.
இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரிடம் தான் நான் உரிமையாக கேட்க முடியும். படத்தில் ஸ்ரத்தாவின் கதாபாத்திரம் அவருக்கெனன அளவெடுத்து தைத்தது போல கச்சிதமாக இருந்தது. என்ன சம்பளம் கொடுத்தாலும் சரி இந்த படத்தில் நடிக்க நான் தயார் என விதார்த் ரொம்பவே ஆர்வம் காட்டினார். அபர்ணதி படத்திற்காக எடையை கூட்டி குறைக்க என ரொம்பவே மெனக்கெட்டார். படம் பார்த்துவிட்டு நன்றாக வந்து இருக்கு என்கிற சந்தோஷத்தில் இப்போது பேசுகிறேன். என் மனைவிக்கு இந்த படத்தை போட்டு காட்டினேன். நீங்கள் பார்த்து விட்டீர்களா என கேட்டபோது ஆம் என்றேன். அப்ப ஏன் இன்னும் திருந்தாமல் இருக்கிறீர்கள் என என்னிடம் கேட்டார். அப்போதே இந்த படத்தின் மீது நம்பிக்கை வந்து விட்டது. நிச்சயமாக இந்த படம் ஒரு பிரச்சாரமாக இருக்காது.
இந்த படத்திற்கு வழக்கமான ஒரு டிரைலர் போல இல்லாமல் புரமோஷனுக்காக கேப் என்கிற ஒரு வீடியோவை வெளியிட்டோம். அது பெரிய அளவில் ரீச்சாகி இருக்கிறது. இரண்டு பேர் பகிர்ந்ததிலேயே 2 கோடி பேர் அதை பார்த்து இருக்கிறார்கள் என்பது சந்தோஷம் தருகிறது” என்றார்.
இயக்குநர் யுவராஜ் தயாளன் பேசும்போது, “இந்த படத்தின் புரமோஷனுக்காக நாங்கள் வெளியிட்ட 8 நிமிட ‘கேப்’ வீடியோ பற்றி பேசுவதா, இல்லை என்னுடைய திரையுலக பயணத்தில் விழுந்த 8 வருட ‘கேப்’ பற்றி பேசுவதா என்கிற எண்ணம் தான் இங்கே வந்ததில் இருந்தே ஓடிக்கொண்டிருந்தது. எட்டு வருடத்திற்கு முன்பு என்னுடைய முந்தைய படத்தின் பத்திரிகையாளர் காட்சி இதே இடத்தில் நடந்தபோது இங்கிருந்து கிளம்பி போனவன் இப்போதுதான் மீண்டும் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்கு முன்பு காமெடி படங்கள் தான் பண்ண வேண்டும் என நினைத்து நான் அந்த படங்களை இயக்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை படத்தின் ஹீரோவுக்காக பயன்படுத்திக் கொண்டேன். இன்று கூட வடிவேலுவிடம் பேசிவிட்டு தான் வந்தேன்.