ரஜினி படத்திற்கு வன்னியர் சங்கம் ‘திடீர்’ எதிர்ப்பு!

ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர்  ரஜினிகாந்த் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத  ‘தலைவர் 170’ படத்தின்  படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் கடந்த அக்.4ஆம் தேதி பூஜையுடன் தொடங்கி தொடந்து நடந்து வருகிறது.

இப் படத்தை ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்படத்துக்கு வன்னியர் சங்கம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வன்னியர் சங்க மாநில செயலாளர் க. வைத்தி  தனது முகநூலில் பதிவிட்டுள்ளது  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அப்பதிவில்,மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி  கூறியுள்ளதாவது,  “ஒட்டுமொத்த வன்னியர் சமூகமும், இதர சகோதர சமுதாயங்களும் எதிர்ப்பு தெரிவித்தும், இதுவரை தான் செய்தது தவறு என நேரடியாக மன்னிப்பு கூட கேட்காதவர் த.செ.ஞானவேல்.இத்தகைய போக்கை கொண்டிருக்கும், ஞானவேல் பங்களிப்பில் உருவாகும் எந்த திரைப்படத்தையும் வன்னியர் சமூக மக்கள் ஆதரிக்காமல், ஒற்றுமையாக புறக்கணிக்க வேண்டும். இதன்மூலம் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாபா  பட வெளியீட்டின் போது ,ரஜினிக்கும் பாமகவினருக்கும்,  நேரடி மோதல் ஏற்பட்டது.  புகை பிடிக்கும் காட்சிகளின் நடிக்க மாட்டேன் என ரஜினி அறிவித்தது தொடர்ந்து, இது தரப்பும் சமாதானமானது. இந்தநிலையில் இயக்குனர்  ஞானவேலை எதிர்ப்பது மூலம்,  ரஜினி திரைப்படத்திற்கு மறைமுக எதிர்ப்பை வன்னியர் சங்கம்   பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.