பாலிவுட் திரையுலகில் ‘கிங் கான்’ என அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த பதான் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், ஜவான் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இரு திரைப்படங்களும் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது டங்கி எனும் திரைப்படத்தில் ஷாருக் கான் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்குமார் ஹிராணி இயக்கி வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர காவல்துறை அறிவித்துள்ளது.
இதனால் ஷாருக்கானுடன் எப்போதும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 6 பேர் இருப்பார்கள். இந்தியா முழுவதும் அவர் எங்குச் சென்றாலும் இந்த 6 பேரும் அவருடன் செல்வார்கள். இது தவிர ஷாருக்கானின் வீட்டிற்கு 4 ஆயுதம் ஏந்திய போலீஸார் எப்போதும் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுவார்கள். .
ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டுள்ள ஒய் பிளஸ் பாதுகாப்பில் எம்பி 5 இயந்திர துப்பாக்கிகள், ஏகே 47 ரக துப்பாக்கிகள், க்ளோக் பிஸ்டல்கள் இருக்கும். பதான்,ஜவான் ஆகிய இரு படங்களின் வெற்றியை கருத்தில் கொண்டே ஷாருக்கின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக விஐபி பாதுகாப்புக்கான சிறப்பு ஐஜி திலீப் தெரிவித்துள்ளார்.