இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் , பரம்வா பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் தயாரிப்பில், ஹேமந்த் எம்.ராவ் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘ஏழு கடல் தாண்டி (சைட் பி)’ . ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், சைத்ரா ஜே ஆச்சார், அவினாஷ், சரத் லோகிதாஷ்வா, அச்யுத குமார், பவித்ரா லோகேஷ், ரமேஷ் இந்திரா மற்றும் கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரக்சித் ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சப்த சாகரடாச்சே எல்லோ (சைட் ஏ)’. காதலின் மகிழ்ச்சி, வலி மற்றும் சவால்களை உண்மைக்கு வெகு அருகே அதே சமயம் ஜனரஞ்சகமான முறையில் திரையில் காட்டி பாராட்டுகளையும் வசூலையும் அள்ளிய இப்படம்,தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியானது. ‘இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம், ‘பான் இந்தியா’ திரைப்படமாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வரும் நவம்பர் 17 அன்று வெளியாகிறது.
இப்படத்தின் ஒளிப்பதிவை அத்வைதா குருமூர்த்தி கையாள, சரண்ராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து நாயகன் ரக்ஷித் ஷெட்டி பேசுகையில், “இது ஒரு உணர்ச்சிபூர்வமான திரைப்படம். முதல் பாகத்தில் பிரிந்த காதலர்கள் இரண்டாம் பாகத்தில் சந்திக்கிறார்கள். அப்போது அவர்களது சூழ்நிலை என்ன, அவர்கள் எடுத்த முடிவு என்ன என்பதை இதயத்தை தொடும் வகையில் சொல்லி இருக்கிறோம்.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சிறப்பாக உருவாகியுள்ளது. எனவே ‘ஏழு கடல் தாண்டி (சைட் பி)’ தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.இப்படத்தை சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.