தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்! நாளை மாலை 4.45 மணிக்கு நடக்கிறது!!

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் (வயது 71.)உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.10 மணிக்கு காலமானார். விஜயகாந்த் உடல் இன்று காலை மருத்துவமனையிலிருந்து அவரது சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

அங்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக, கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு ஏராளமான தொண்டர்கள் தொடர்ந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் நாளை 4.45 மணிக்கு நடைபெறும் என்றும் அவரது உடல் தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்றும்  அவரது மனைவியும் தேமுதிகவின் பொதுச்செயலாளருமான   பிரேமலதா அறிவித்துள்ளார்.