தலைப்பினைப் படித்ததும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். ,சிலர் விதிர்விதிப்பார்கள் ..
சநாதனம் போற்றும் சங்கரமடமும் ,’பிறப்பொக்கும் யாவர்க்கும்’ என தூக்கிப்பிடித்த திராவிட தளகர்த்தர் பேரறிஞர் அண்ணா வாழ்ந்த இடமும் காஞ்சிதானே.. !
இங்கு ஜாதிகள் தூக்கிப்பிடிக்கப்படுவதும் ,ஆணவக் கொலைகள் அதிகார வர்க்கத்தில் போற்றப் படுவதும் சைரனில் ஊடுபாவாக இருக்கிறது.
சைரன் ஒன்றுதான். அது பயன்பாடு இரு வேறு இடங்களில் அமைந்து விட்டது. ஆம்புலன்ஸ் சைரன் ஜெயம் ரவி. ஆயுட் தண்டனை கைதி. காவல்துறை அதிகார சைரன் கீர்த்தி சுரேஷ். இந்த இரு சைரன்களும் எதிர் எதிராக நின்று ஒலி எழுப்புகிற போது ஏற்படுகிற விளைவுதான் கதை.!
காலம் காலமாக தொடருகிற சா’தீய’ பாஸ்பரசை எச்சரிக்கையுடன் கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ். கமர்சியலுக்காக சில மீறல்கள் . அது ரசிகர்களுக்காக. டிஎஸ்பி சமுத்திரக்கனியை ஒரே அடியில் சாய்த்து விடமுடியும் என்கிற வாய்ப்பு பட்டாசு ஒளியாய் ஜெகஜோதியாக ஒளிர்கிறபொது அவரை கோவிலுக்குள் இழுத்து சென்று வதைப்பது ஆக்சன் தேடுகிற ரசிகர்களுக்காகத்தானே.! ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு சமர்ப்பணம். !
எந்தப்படத்திலும் பார்த்திராத ஜெயம் ரவியை இந்த படத்தில் திலகன் வடிவில் பார்க்கிறபோது “எங்கே ராசா போயிருந்தே இத்தனை காலமா ?”என வாய்விட்டு கத்தலாம் போலிருந்தது.
ஒரு டீன் ஏஜ் பெண்ணின் தகப்பன். அவள் குழந்தையாக இருந்தபோது ஜெயிலுக்குள் சென்றவர். அந்த பாச மகள் தற்போது எப்படியிருப்பாள் என்பதை பார்க்க வேண்டும் என்கிற ஆவலுடன் பரோலில் வந்த ரவி எவ்வித பரபரப்பு பதட்டங்களை பகிரங்கப் படுத்தாமல் செயலாற்றுவது ரவிக்கே புதிதாக இருக்கலாம். ஆகச் சிறந்த நடிப்பு. கதை முழுமையும் ஆர்ப்பரிக்காத தெளிந்த நீரோடை.!
வில்லனால் மிரட்டப்படுகிறபோது ஆம்புலன்ஸ் டிரைவரான ரவி “எமனை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு அலையும் என்னையே மிரட்டுறியா ?” என்று கேட்கிற போது நம்பியார் பாணியில் குமுறாமல் சரத்பாபு மாதிரி சாந்தமாக பேசுகிறார். ஆனால் உள்ளமோ பாய்லர் மாதிரி.!
“அம்மாவைக் கொன்ற கொலையாளி அப்பா ” என்கிற அழுத்தமான நம்பிக்கையில் ஊறிப்போன மகள் தந்தையின் முகத்தை பார்க்கவும் விரும்பவில்லை என்பது மனசு உடைகிற காட்சி.!
போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் நாயகி கீர்த்தி சுரேஷ் மீதும் ஒரு கொலைப் பழி இருக்க அந்த இமேஜுடனேயே தன் பணியை செய்து வருகிறார். பரோல் ரவி வந்த பின்னர் நடக்கிற இரண்டு கொலைகளுக்கு காரணம் கண்டறிந்து சினம் கொள்கிறார் கீர்த்தி சுரேஷ் . இவரது மொத்தப்பார்வையும் ரவி மீதே பாய்கிறது. ஆனால் உண்மை என்ன ? முடிவில் சொல்கிறார்கள். சிறந்த நடிப்பு கீர்த்தி !
டிஎஸ்பியாக வரும் சமுத்திரக்கனி சிறப்பு. சாதீய காப்பாளர். ! இதுவரை ஏற்காத தெனாவெட்டான கேரக்டர்.
யோகி பாபு படம் முழுக்க வருகிறார். பரட்டை கான்ஸ்டபிள் என்பது உருத்தல் தான் !
அரசியல் அழகம் பெருமாள், அஜய், துளசி, சாந்தினி இன்னும் பலர் நடித்துள்ளனர்.
அனுபமா பரமேஸ்வரன் வந்ததுவரை வசந்தமே!
ஜீவி பிரகாஷின் இசை. மெலடி ரசனை.. செல்வகுமாரின் ஒளிப்பதிவு இந்த படத்தின் பிரம்மாண்டத்தைக் கூட்டி இருக்கிறது அதிலும் அந்த ஆம்புலன்ஸ் சேசிங் அட்டகாசம்.
தகரத்தை தரையில் தேய்த்து நாராச ஒலி எழுப்பி ஒருத்தனை போட்டுத்தள்ள முடியும் என்கிறபோது அந்த பேரிரைச்சல் ஊரை கூட்டவும் வாய்ப்பு இருக்கா இல்லியா ?
படத்தின் பின்னணி இசைக்கு சாம் சி.எஸ் ..
பிள்ளை குட்டிகளுடன் பார்ப்பதற்காக ‘சைரன்’
–தேவிமணி.