கவுதம் வாசுதேவ மேனன் எழுதி இயக்கிய படம் என்றால் தமிழ்ப் படங்களில் தனித்து தெரியும் . காதல் இருக்கும், காமமும் கலந்து இருக்கும். விரசம் இருக்காது.
இந்த ஜோஷ்வா எப்படி? ஹாலிவுட் சாதி.
முரட்டுத்தனமான கதைக்கு சரியான ஆளைத் தான் தேர்வு செய்திருக்கிறார் மிஸ்டர் மேனன். துணை நாயகனாக வந்துகொண்டிருந்தவர் வருண். இவரை நாயகனாக களம் இறக்கியிருக்கிறார். சரியான தேர்வுதானா ?
பெய்டு கில்லர். கூலிக் கொலையாளி. பணம் கொடுத்தால் எவ்வளவு பெரிய கொம்பனையும் போட்டுத் தள்ளிவிடுவார். உடல் பலம் ,மன வலிமை ,புத்திசாலித் தனம் ஆகியவை அதிகமாகவே இருக்கிறது. காதலிலும் கெட்டி. மேல்தட்டு கூலிக் கொலையாளி. சர்வதேச டிரேட் மார்க். வருண் சரியான தேர்வு.!
அமெரிக்க பெண் வழக்குரைஞர் பாதுகாப்புத் தேடி இந்தியா வந்தவருக்கு , காக்கும் கரமாக பணியமர்த்தப்பட்ட வருண் வென்றாரா ,வீழ்ந்தாரா ? இதுதான் ஜோஷ்வா ,இமை போல் காக்க படத்தின் கரு.
பெண்டு கழண்டிருக்கிறது வருணுக்கு ! சின்ன ஜேம்ஸ்பாண்ட் . சண்டைகளில் அத களம் . ரண களம் . நாயகியாக புதிய வரவு ராகே. காதலனாக பாவிக்கபட்டவன் காசுக்கு கொலை செய்கிறவன் என தெரிந்ததும் கழன்று கொள்ள ,அவனோ காவலனாக இருக்க விண்ணப்பிக்கிறான். வருண் நடிப்பு மின்னுகிற இடம். நாயகி ராகேயும் ஈடு கொடுத்திருக்கிறார். முத்தம் கொடுப்பான் என உதடு குவித்து நெருங்குகையில் பாவி அவனோ “பல் விலக்கல ” என்று விலகியதும் நமக்கு “பச்சக் ” என்கிற நமைச்சல் !
விஜய் டி வி திவ்யதர்சினிக்கும் வேடம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். நமைச்சல் இல்லாத கேரக்டர்.
இடைவேளைக்குப் பின் கதை கோலி’வூ’ட்டுக்கு வந்து விடுகிறது.
கிருஷ்ணாவுக்கு பக்கா வில்லன் வேடம். இதனால் அவருக்கு முன் கதை சொல்ல வேண்டிய கட்டாயம். திரைக்கதையுடன் சமரசம் செய்து கொண்டு நடத்தி செல்கிறார் கவுதம் மேனன்.
விசித்ராவை திணித்திருக்கிறார்கள் .மன்சூர்அலிகான் ,கிட்டி இருவருமே முடிவில் வந்து முடிந்தும் போகிறார்கள் . அப்பன் கிட்டிக்கு மேலோக பாஸ் போர்ட் கொடுப்பவர் மகள் ராகே . சட்டென இவர் மனம் மாறுவது வழக்கமான பாணி .
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரா இயக்குநருக்கு கண் என துணையாக வாழ்ந்திருக்கிறார்.
ஸ்டண்ட் மாஸ்டர் யானிக்பென். மின்னலும் இடியும் மோதினால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது சண்டைக் காட்சிகள். மிஸ்டர் வருணுக்கு அடி,இடி படலியே ? இன்னா இஸ்பீடு !!
ஆங்கிலப் படம் பார்க்கிற உணர்வு . வருணுக்கு நல்வரவு !
–தேவிமணி