தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 2024 – 26 ஆண்டுகளுக்கான தேர்தல்  இன்று காலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள இசைக்  கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் தொடங்கியது.மாலை 4 மணி வரை நடக்கிறது.  ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், செயலாளர், பொருளாளர் என மொத்தம் 27 பதவிகள் கொண்ட அந்த சங்க தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 1-ம் தேதி நிறைவடைந்த நிலையில் தலைவர் பதவிக்கு இயக்குனர்  ஆர்.வி உதயகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதேபோல் செயலாளர் பதவிக்கு இயக்குனர் பேரரசு மற்றும் பொருளாளர் பதவிக்கு இயக்குனர் சரண் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களைப் போல் துணைத்தலைவர் பதவிக்கு அரவிந்த்ராஜ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் மனு தாக்கல் செய்தனர். இவர்களைத் தவிர இணைச் செயலாளர்கள் பதவிக்கு சுந்தர்.சி, எழில் மற்றும் ஏ.வெங்கடேஷ் ஆகியோரும்   வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.ஆனால் அந்த பதவிகளுக்கு  வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால்,  இவர்கள் 8 பேரும் நிர்வாக பொறுப்புகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

எஞ்சியுள்ள  இயக்குனர் பிரிவு செயற்குழு உறுப்பினர்கள் (10) மற்றும் உதவி இயக்குனர் பிரிவு செயற்குழு உறுப்பினர்கள் (7) பதவிகளுக்கும், உதவி இயக்குனர்கள் பிரிவு இணைச் செயலாளர்கள் 2 பதவிக்கு இன்று  தேர்தல் நடந்து வருகிறது.  வாக்குப் பதிவு முடிந்ததும், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்கின்றனர். இதையடுத்து உடனடியாக புதிய நிர்வாகிகள்  பதவி ஏற்க உள்ளனர்.கடந்த பல ஆண்டுகளாக இயக்குனர் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த ஆர்.கே. செல்வமணி இந்த முறை போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.