தந்தை தியாகராஜனின் வழிகாட்டுதல்படி தனது திரையுலக வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டிருப்பவர். முன்னணி நடிகர்களில் ஒருவர். இயக்குநர் ஷங்கரின் கதாநாயகன் ,உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் முதலில் நாயகனாக தமிழில் நடித்திருப்பவர்.
தற்போது விஜய்யின் படமான ‘கோட்’ டில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
விரைவில் வெளிவர இருப்பது ‘அந்தகன்’ திரைப்படம். தந்தைதான் இயக்குநர்.
அண்மையில் பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடிய பிரஷாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது.
“‘நான் எப்போதும் என் குடும்பமாக நினைக்கும் பத்திரிகையாளர்கள், ரசிகர்களுக்கு வணக்கம். என் பிறந்த நாளன்று என் ரசிகர் மன்ற சகோதரர்கள் பல நற்பணிகளை செய்து வரும் நிலையில், மக்களிடம் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி வருகிறார்கள்.
முதல் கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் தொடங்கியவர்கள், தற்போது சென்னையில் என் பிறந்தநாளில் தொடங்கியிருக்கிறார்கள். அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், அது நமக்கான பாதுகாப்பு.
பத்திரிகையாளர் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்கிறார்கள், அவர்களுக்கு தெரியும் தலைக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பது, இருந்தாலும் இதை நான் ஒரு அறிவுரையாக இல்லாமல், ஒரு தகவலாக அவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். கோடைக்காலம் தொடங்கிவிட்டாலும் சற்று சிரமம் பார்க்காமல் தலைக்கவசம் அணியுங்கள், அது நமக்கு மட்டும் அல்ல நமது குடும்பத்திற்கு பாதுகாப்பானது. அதேபோல் நிறைய தண்ணீர் குடியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.