அமீர், ஒரு கேபிள் டிவி ஆபரேட்டர். இவர், எதிர் கட்சித் தலைவர் ஆனந்தராஜின் மகளான சாந்தினியின் மேல் காதல் கொள்கிறார். இந்நிலையில், வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்படுகிறது. சாந்தினி ஒரு வார்டில் போட்டியிட முன் வருகிறார். தன் காதலை மேலும் வளர்த்து கொள்வதற்காக அமீரும் ஒரு வார்டில் போட்டியிடுகிறார். இருவருக்குள்ளும் நெருக்கம் உருவாகிறது. ஆனந்த்ராஜ் அவர்களின் காதலை கடுமையாக எதிர்க்கிறார். அமீர், காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனநிலைக்கு வருகிறார். இதையடுத்து, ஆனந்த்ராஜ் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். அமீரை போலீஸ் கைது செய்கிறது. அங்கு, அவரை கொல்ல ஒரு கும்பல் முயற்சிக்கிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், உயிர் தமிழுக்கு படத்தின், அரசியல் நையாண்டி, காதல் கதை.
அமீர், எம் ஜி ஆர் பாண்டி கதாபாத்திரத்தில், கமர்ஷியல் ஹீரோவாக ஜொலித்திருக்கிறார். காதல் செய்யும் போதும், கட்சி அலுவலகத்தில் செய்யும் சேட்டைகளின் போதும், பிரச்சார மேடைகளில் கப்சாக்களை அள்ளி வீசி, வீர வசனம் பேசும் காட்சிகளிலும், நன்றாகவே நடித்திருக்கிறார். சாதரண உறுப்பினராக இருந்து மாவட்டத்தலைவராக உருவெடுப்பது வரையில், எம்ஜிஆர் பாண்டி கதாபாத்திரத்தை உயர்த்திப்பிடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் சாந்தினியிடம் செய்யும் ரவுசு, ஒரு ஒஉது தினுஷு. பாட்டுப்பாடி ஆடவும் செய்திருக்கிறார். அதிரடி காட்டி அடியாட்களை வானத்தில் பறக்கவும் விட்டிருக்கிறார். ரசிக்கும்படியே இருக்கிறது.
அமீருக்கு ஜோடியாக நடித்த, அறிமுக நடிகை சாந்தினி ஸ்ரீதரன். இருவிதமான உடல்வாகுடன் காட்சித்தருகிறார். அமீரின் காதலொ அட்ராசிட்டிக்கு ஓகே சொல்லி, சிரிப்பினையும் லுக்கினையும் அள்ளி வீசுகிறார். அதை கண்டு அமீர் மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகர்களும் ஹேப்பியாகி விடுகின்றனர். நடிப்பதற்கு சில காட்சிகளும் இருக்கிறது. நன்றாகவே நடித்திருக்கிறார்.
மற்றபடி, எதிர்கட்சித் தலைவராக ஆனந்த்ராஜ், ஆளும் கட்சித்தலைவராக ராஜ்கபூர், அரசியலில், அமீருக்கு வாழ்க்கை கொடுக்கும் இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சரவண சக்தி, கஞ்சா கருப்பு என அனைவரும் குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளனர்.
வித்யாசாகரின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பலமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் தேவராஜின் ஒளிப்பதிவிலும் குறையில்லை.
தமிழக அரசியலில் நடந்த பரபரப்பான சம்பவங்களை, கேலி, கிண்டலுடன் படமாக்கி ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார், இயக்குநரான ஆதம் பாவா. அதில், ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இதுவரை வெளியான சில படங்களின் சாயல் இருந்தாலும், மோசம் என்று சொல்லுமளவுக்கு இல்லை. பார்க்கலாம்.
வருடங்கள் பல கடந்த நிலையில், திட்டமிட்ட நேரத்தில் ‘உயிர் தமிழுக்கு’ வந்திருந்தால், அமீர் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக தொடர்ந்திருப்பார்.