விஜய் கனிஷ்கா, தனது அம்மா சித்தாரா, தங்கை அபி நக்ஷத்ரா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களது குடும்பம், வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்கத்தின் கொள்கைகளை பின் பற்றி நடந்து வருகிறது. அதாவது, எந்தவிதமான உயிருக்கும் தீங்கு விளைவிக்காத, சைவ உணவு விரும்பிகள். இவர்களது வாழக்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாள், விஜய் கனிஷ்காவின் அம்மாவையும், தங்கையையும் கடத்தும் ஒரு முகமூடி மனிதன், அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால், சில கொலைகளை விஜய் கனிக்ஷா செய்ய வேண்டும் என நிர்பந்திக்கிறான். முகமூடி மனிதனுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம், முகமூடி மனிதன் நிர்பந்தப்படி கொலைகள் நடந்ததா? ‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் கதை.
முதல் படத்திலேயே, அறிமுக நாயகன் விஜய் கனிஷ்காவுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அப்பாவியாகவும், ஆக்ரோஷமாகவும் இருவேறு மாறுபட்ட நடிப்பினை கொடுத்து, நடிக்கத் தெரியும் என நிரூபித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. அதிலும், “கேஜிஎஃப்’ வில்லன் ராமச்சந்திர ராஜுவுடன் மோதும் காட்சிகள் டெரர்.
முகமூடி மனிதனை தேடிப்பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார். கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார். படம் முழுவதும் வலம் வருகிறார். அவருக்கு, நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு செம்ம ஃபைட்! ஆக்ஷன் பிரியர்களுக்கான விருந்து!
விஜய் கனிஷ்காவின் அப்பாவாக, ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, கண்களை கசிய விடுகிறார்.
மற்றபடி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சித்தாரா, தங்கையாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, அனுபமா குமார், ராமச்சந்திரன்க்ஷ் மருத்துவமனை டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர், படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
பாலசரவணன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவரையும் வீணடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண் மற்றும் இசையமைப்பாளர் சி.சத்யா இருவரும் படத்தின் பெரும்பலம்.
இறுதி வரை, ரசிகர்களை படப்படப்புடன் வைத்திருக்கும் திரைக்கதை, யூகிக்கமுடியாத காட்சியமைப்புகள், க்ளைமாக்ஸ் டிவிஸ்ட், என ஒரு நல்ல க்ரைம் த்ரில்லருக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்திருக்கிறார்கள், இரட்டை இயக்குநர்களான சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன் ஆகிய இருவரும்.
‘ஹிட் லிஸ்ட்’ – க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்பிப்பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்!