திரைப்பாடல்கள் அல்லாது தனியிசைப் பாடல்களிலும் கவனம் செலுத்தி வரும் மதன் கார்க்கியின் வரிகள் மற்றும் இசையில் ‘முடிவிலி’ எனும் இசைத் தொகுப்பு ஜூலை 26 2024 அன்று வெளியாகிறது. இதனை பா மியூசிக் நிறுவனம் அனைத்து இசைச் சீரோடைகளிலும் வெளியிடுகிறது.
முதன்முறையாக மதன் கார்க்கி இசையமைத்து வெளியிடும் தொகுப்பு இது. 10 பாடல்கள் கொண்ட இந்தத் தொகுப்பு காதலின் வெவ்வேறு நிலைகளையும் கோணங்களையும் பாடுகிறது. பண்ணாட்டு இசையோடு தமிழ் மொழியின் அழகியலை இணைக்கும் பத்துப் பாடல்களின் தொகுப்பே ‘முடிவிலி’.
புதிய மென்கருவிகள் கொண்டும் ஐலா, எம்.வி.எஸ் எனும் செய்குரல்கள் கொண்டும் இந்தப் பாடல்கள் உருவாக்கப்படுள்ளன. காதல் தோன்றும் நிலை, காமம் உணரும் நிலை, இல்லற வாழ்வில் காதல், காதலைப் பிரியும் வலி, ஒருவழி ஒருபால் காதல், வேறொரு கிரகத்தில் முத்தம், நரைகளோடு பிறக்கும் காதல் என பல வித நிலைகளில் காதலைப் படம் பிடிக்கும் பாடல்கள் ‘முடிவிலி’ இசைத் தொகுப்பில் வெளியாகின்றன.
போர்த்துகீசிய கிராமிய இசை மற்றும் கொரியன் பாப் இசை போன்ற பண்ணாட்டு இசை வகைகளில் இந்தப் பாடல்கள் உருவாகியுள்ளன. ஒலி வடிவில் மட்டும் இப்போது பாடல்கள் இசைச் சீரோடைகளில் வெளியாகின்றன. வரும் மாதங்களில் இந்தப் பாடல்களுக்கான ஒளிவடிவமும் யூடியூப் போன்ற தளங்களில் வெளியாகும்.