சரி கதைக்கு வருவோம்.
பிற்படுத்தப்பட்டவர்கள் வாழ்கிற சின்ன கிராமம்தான் அது. உயர் சாதிக்காரர்களின் ராஜ்யம் . என்னதான் சட்டங்கள் சாதகமாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்கள் முடக்கப்பட்டு ஆதிக்க சாதிக்காரர்களின் ஏவலுக்கு அடங்கியே வாழ்கிறார்கள்.தலைமுறைகள தாண்டியும் இன்னல்கள் தொடர அது மூன்றாம் தலைமுறையில் எப்படி முனை ஒடிக்கப்பட்டது என்பதுதான் கதை. சார் என்பது இருசாராரும் அழைக்கப்படுகிற ஆசிரியரை குறிப்பதாகும்.
அடக்கி வாசித்திருக்கிறார் பருத்தி வீரன் சரவணன். இவரது அறிமுக காலத்தில் கேப்டனுக்கு இணையாக வரக்கூடியவர் என நம்பியவர்களில் நானும் ஒருவன். திறமையானவர் எப்படியோ திசை மாறிப்போனார். இந்த கதையில் கருப்புச்சட்டை அணிந்த ஆசிரியர். தந்தையின் விருப்பம் ,ஆசையை எப்படியும் நிறைவேற்றி உயர்நிலைப்பள்ளியாக மாற்றிவிடவேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சி தன்னை முடக்கிவிட்டதை உணர்ந்து .. சரவணா ! கலங்க வைத்து விட்டாயப்பா! உனக்கு நீயே விலங்கு பூட்டிக்கொண்டு சாய்கிறபோது ,அந்த வினாடி கலங்கிப் போகிறோம்.
நாயகி தேவை . சாயாதேவி வருகிறார் .படத்துக்கும் பாடல்களுக்கும் பங்களிப்பு . இயல்புடன் நடித்து நல்ல பெயர் வாங்கிவிடுகிறார்.
வ.ஐ.ச.ஜெயபாலனின் முட்டை கண்கள் . கட்டைக்குரல் வசனம். தயாரிப்பாளர் சிராஜுக்கு வில்லன் கேரக்டர். நட்பாக பழகி கொடுவாளை முதுகில் இறக்கும் கொடுமையான கேரக்டர். நிறைவாக செய்திருக்கிறார்.
கிராமத்து அம்மாவாக ரமா, கோடம்பாக்கத்து டிரேட் மார்க் தயாரிப்பு. .
இனியன் ஒளிப்பதிவு ,திரைக்கதைக்கு வலிமை. பாராட்டுக்கள்.
சித்துகுமார் இசை கதைக் களத்துக்கு துணையாக இருக்கிறது. .பாடல் வரிகளில் கருத்துகளை கேட்க முடிந்தது. வெற்றுச்சொற்களை காண வில்லை.
எழுதி இயக்கியிருக்கிறார் போஸ்வெங்கட். இன்றைய கடைக்கோடி கிராமங்களிலும் காணப்படுகிற ஏற்றத்தாழ்வுகள் , கல்வி நிலை முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன.
கல்விக்கு எதிராக மூட நம்பிக்கைகள் எப்படியெல்லாம் கைக்கொள்ளப்படுகின்றன என்பதை துணிச்சலுடன் சொல்லியிருக்கிறார். ஆனால் குட்டி தெய்வ வழிபாடுகள் வர்ணாஸ்மரத்துக்குள் வருவதில்லை.
சார் எப்படி இருக்கிறார். ?
வாழ்த்தலாம் .
–தேவிமணி