மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைப் பயணம் வெகு நேர்த்தியாக சொல்லப் பட்டிருக்கிறது . திரைக் கதை திரிக்கப்படாமல் காதல் ,குடும்ப பாசம், கடமை ,என சிறப்பாக பயணித்திருக்கிறது.
மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர். 2014 -ல் காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் வீர மரணம் அடைந்தவர். உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமலின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நாயகன் முகுந்த் வரதராஜனாக புதிய பரிணாமம் எடுத்திருக்கிறார். தமிழச்சினிமாவில் ஒருவர் வெளியேறி வெற்றிடம் ஏற்படுத்தியிருக்கிற நிலையில் சிவாவின் புதுப் பரிணாமம் முக்கியத்துவம் பெறுகிறது. அமரன் அவரது வாழ்க்கையில் திசை மாற்றக் கருவி என்றே சொல்லலாம்.
“மதத்தைப் பற்றி கவலையில்லை.ஆனால் ஒரு பட்டாளத்தானுக்கு என் மகளை கட்டிக்கொடுக்கமாட்டேன் “என்று இந்துவின் அப்பா ( ராணுவ டாக்டர்.) சொல்லும்போது பல்லவியின் பதிலும் உடல் மொழியும் சூப்பர் . இதே பல்லவி தொலைபேசி வழியாக குண்டுகளின் ஒலியை உணர்கிறபோது துடிக்கிற துடிப்பு நம் உள்ளத்தைப் பிசைந்து விட்டது . . வாழ்ந்து கொண்டிருக்கிற இந்துவின் கேரக்டருக்கு எள் முனையளவு கூட பங்கம் ஏற்படாமல் சிறப்பு சேர்த்திருக்கிறார் சாய் பல்லவி. கணவன் இறந்துவிட்டான் என்பதை கேட்டதும் சாய் துடிக்கிற துடிப்பு எந்த நடிகையாலும் தொட முடியாத உயரம்.என்னை கேட்டால் இந்த கதையில் முதலிடம் சாய் பல்லவிக்கும் இணையான இடத்தை சிவகார்த்திகேயன் ,இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் பங்கிட்டுக் கொடுப்பேன்.ஆனால் மூவரும் இந்திய திருநாட்டுக்கு மிகப்பெரிய கவுரவத்தை உலக அளவில் அளித்திருக்கிறார்கள். வாழ்க அமரன் படக்குழு .
முகுந்த் – இந்து இடையேயான காதல் காட்சிகள் முற் பாதியில் அளவோடு ,ரசிக்க வைக்கின்றன. உண்மையான கேரக்டர்களை கொச்சைப்படுத்தாமல் கையாண்டிருக்கிறார்கள். ஊடல் ,கோபம் ,காதல் எல்லாமே மிக மிக இயல்பாக அமைந்து விட்டன.
இசை ஜி. வி. பிரகாஷ். மற்றொரு நாயகன். முதன்முதலாக ஒரு பயோ பிக் படத்துக்கு இசை. அதுவும் காதலும் போரும் கலந்து கட்டிய பெரிய படம். சிறப்பான இசை . நெஞ்சை பதற வைக்கும் போர்க்களக் காட்சிகளுக்கு வாத்தியங்களை கையாண்டிருக்கிற லாவகம் மேலை நாடுகளுக்கு இணையானவை,வாழ்த்துகள் ஜி. வி . பி.
ஒளிப்பதிவு சதீஷ் கிருஷ்ணன் . ஸ்டண்ட் அன்பு அறிவு ! இவர்கள் இல்லாமல் அமரன் முழுமை பெற்றிருக்காது.
வலிந்து புனைந்து சொல்லுகிற மேதாவித்தனம் எனக்கில்லை. அமரன் படத்தில் காணப்படுகிற பிசிறுகளை மக்கள் பொருட்படுத்தப்போவதில்லை .அவைகள் துருத்திக்கொண்டும் இல்லை.
அமரன் . வாழ்கிறான் ,அவனுக்கு மரணமில்லை.!
–தேவிமணி