டெல்லி கணேஷ் காலமானார்! பிரதமர் மோடி இரங்கல்!!

தமிழில் பிரபல நடிகராக வலம் வந்தவர் டெல்லி கணேஷ். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 80.அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் செந்தமிழ் நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது .   டெல்லி கணேஷின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர் அவரது இறுதி சடங்கு நாளை நடக்கவுள்ளது.

டெல்லி கணேஷின் மறைவு குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவரின் மகன் மஹா, “அப்பாவுக்கு 80 வயசு ஆகிடுச்சு. இப்போ சமீபத்துல சதாபிஷேகம்கூட பண்ணியிருந்தோம். இப்போ கொஞ்சம் நாட்களாக வயது மூப்பின் காரணமாக சில பிரச்னைகள் வந்தது. ஆனால், திடீர்னு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. நேற்று இரவு வழக்கம்போல மாத்திரை கொடுக்கலாம்னு போனோம். அப்போது அவர் உடலிலிருந்து எந்த அசைவும் தெரியல. அடுத்ததாக மருத்துவரை அழைத்துப் பார்த்தோம்.அவங்க அப்பா மறைஞ்சுட்டார்னு சொன்னாங்க. எங்களுக்கு இது மீளமுடியாத இழப்பு. நாளைக்கு காலைல அப்பாவினுடைய இறுதிச் சடங்குகள் நடக்கவிருக்கு. எங்க உறவினர்களும் பலர் வரணும், நடிகர் சங்கத்துல இருந்தும் வரவிருக்காங்க. அக்கா நேத்து இரவுகூட அப்பாகிட்ட எப்போதும் போல நல்லாதான் பேசிட்டு இருந்தாங்க. அப்பாவும் நல்லாதான் பேசினாரு. ஆனால் திடீர்னு இப்படி ஆகிடுச்சு…” என்கிறார் வேதனையுடன் 

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,’புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மாசற்ற நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர். டெல்லி கணேஷ் ஏற்று நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களால், அவர் என்றும் நினைவுகூரப்படுவார். நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தவர். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி..! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி கணேஷ்கடந்த  1944 வருடம் தூத்துக்குடியில் பிறந்ததார். . இவர் பெரும்பாலும் தமிழில் குணசித்திர மற்றும் நகைசுவை வேடங்களில் நடித்து வந்தார். இவர் நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். இவரது பாத்திரம் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது. இவர் 1976 இல் இருந்து தற்போது வரை 400 இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா எனப்படும் ‘தில்லி’ நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் பணியாற்றினார்.

டெல்லி கணேஷ் நடித்து 1977-ல் வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம்  தமிழ் திரையுலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே. பாலசந்தர். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் இவர், அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். இவரது நடிப்பில்   சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா மற்றும் தெனாலி.ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.டெல்லி கணேஷ்  தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.  இவர் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.