ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், சமூக வலைதளங்களில் இதை வைத்து ஏராளமான வதந்திகள் வெளியாகி வருகிறது. இந்த சூழலில், ஏ.ஆர். ரஹ்மான் தற்போது அவதூறு கருத்துகளை வெளியிடுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த நோட்டீஸில், சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூபில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் பதிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இப்படியான அவதூறு வீடியோக்கள் மற்றும் கட்டுரைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்; இல்லையெனில், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்; அவதூறு பரப்ப வேண்டாம் என சாய்ரா பானு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடரபாக சாய்ரா பானு வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “நான் இப்போது மும்பையில் உள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அவரிடம் இருந்து பிரேக் எடுக்கவும் அதுதான் காரணம்.அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என இந்நேரத்தில் யூடியூப் பதிவர்கள், ஊடக நிறுவனங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம். அவர் உலகின் சிறந்த மனிதர்; அற்புதமானவர். அவரது பிஸியான வேலைகளுக்கு இடையே அவருக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என நான் இங்கு வந்துள்ளேன். சிகிச்சை பெறுகிறேன்.
அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவரை நம்புகிறேன். விரைவில் சிகிச்சை முடிந்து நான் சென்னை திரும்புவேன். அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார் .