ஒரு தலைமறைவு போராளித் தலைவனின் வாழ்க்கையை சொன்னவர்கள் ,அந்த தலைவன் எதற்காகப் போராடினானோ அந்த கொள்கையை கொல்லாமல் சொன்னார்களே என்கிற ஆறுதல் எனக்கு உண்டு. படத்தில் விஜய சேதுபதி என்கிற பெருமாள் வாத்தியார் ஆதிக்கவாதிகளின் அராஜகபோக்குக்கு ,பச்சையாக சொல்வதென்றால் துரோகத்துக்கு எப்படி இரையானார் என்பதுதான் ஒன்லைன் . ஜெயமோகன் உள்ளிட்ட படைப்பாளிகளின் கதையாக்கம் விடுதலை.2 .
ஒரு தீவிரவாதியின் தலைமறைவை வைத்து மாநில அரசு எப்படியெல்லாம் ஒன்றிய அரசு நிதியை அனுபவிக்கப் பார்க்கிறது என்பது ஊடுபாவாக இருந்தாலும் –அதுவும் சாத்தியம்தானே! ராஜீவ் மேனனை தலைமைச் செயலாளராக நடிக்க வைத்திருப்பதன் வழியாக இயக்குநர் வெற்றிமாறன் நடப்பினை சொன்னாலும் அதில் மறைந்திருக்கிற உள் ளர்த்தம் அரசியலாருக்குத் தெரியாது போகுமா ?. கேரள மூளை !!! இப்படியாக கதை முழுவதும் சகுனித்தனத்தை பட்டை உரித்திருக்கிறார்கள். உதாரணம் அமைச்சர் இளவரசு பாய்ச்சல் காட்டிய அதே வேகத்தில் பம்மிப் போவதும்.! அதிரடி ஆரம்பம்.!வெற்றிமாறனை இப்படி பல காட்சிகளில் வியப்புடன் பார்க்கிறோம் .!இந்த ஒற்றை ஆளை வைத்துக்கொண்டு பெரிய ஆட்டமே போடலாம்.!
பெருமாள் வாத்தியாரை சூரி கைது பண்ணியது பார்ட் ஒன் . அவர் யார் ,எத்தகையவர் ,எவ்வாறு புரட்சியாளராக மாறி ,துரோகத்துக்கு இரை ஆகிறார் என்பது பார்ட் 2 .
பொதுவாக இத்தகைய கதைகளில் நமது பாமரன் எதிர்பார்ப்பது கொள்கை ,தத்துவங்களை அல்ல. போர் அடித்துவிடும். அந்த தப்புகள் இந்த படத்தில் அதிகம். இயல்பு,மற்றும் யதார்த்தம் ,உண்மை ஆகியவைகளுக்கு நம்ம பாமரன் இன்னும் அந்நியனே.! ரஜினி விஜய் இவர்களெல்லாம் கடவுளர்களாக அந்த பாமரன் வழிபடுவது அதனால்தான்.!
சர்க்கரை மில் முதலாளி மகள் கம்யூனிஸ்டாவதை அவன் ஏற்கமாட்டான். தொழிற்சங்கத் தலைவர் சேதுபதிக்கு அவள் பொண்டாட்டி என்றால் ஏற்பானா ?அவனுக்கு மோகன் குமாரமங்கலம் ,கல்யாணி குமாரமங்கலம் என்கிற முன்னோடிகள் நினைவில் இல்லை. ஆலை அதிபர் மகளாக மஞ்சு வாரியர் சிறந்த தேர்வு.
பண்ணையார் போஸ் வெங்கட், இயக்கத் தலைவர் கிஷோர்,இன்ஸ்பெக்டர் தமிழ் ஆகியோர் சிறப்பான வெளிப்பாட்டினை கொடுத்திருக்கிறார்கள். பண்ணையார் தொடர்பான காட்சிகளில் வன்முறை அதிகம் என்றாலும் அதுதானே உண்மை.!
விஜயசேதுபதிக்கு சரியான களம். தலைமறைவுத் தலைவனுக்கு உரிய அத்தனை குணங்களும் பொருந்திப் போகின்றன . எப்படி வேண்டுமானாலும் தன்னுடைய முடிவு அமையலாம் அதனால் மனைவி என்கிற முறையில் தனது உடலுக்கு உரிமை கோரக்கூடாது என மஞ்சுவிடம் கேட்பது ,அந்த ஒற்றைக் காட்சியே போதுமானது. ஆழமான உணர்வு கடத்தல். மஞ்சுவும் அப்படியே.!கதையின் நாயகன் சேதுபதி விருதுகளுக்கு உரியவன் . உயிரோட்டமான கதையுடன் இசைந்து செல்லாவிட்டால் இசைக்கு பெருமை இல்லை. ராஜா என்றைக்குமே இளையராஜா,அவரது தொடக்க கால பொதுவுடமை வாழ்க்கை உணர்வுடன் இசை அமைந்திருக்கிறது.
சேத்தனிடம் அப்படியோர் ஆற்றலை எதிர்பார்க்கவில்லை. மிகச்சிறப்பு.
சூரியும் தமிழும் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் — சூப்பர். தமிழையும் மற்றும் ஒருவரையும் ஜீப்பில் தொங்கலில் விட்டுவிட்டு உயிர் பயத்தை காட்டுகிற காட்சி இன்னமும் கண் களுக்குள்.!சாதித்து விட்டோம் என்கிற நிறைவில் அமைதியாக சூரி நடந்து செல்கிறபோது தியேட்டரில் கரவொலி அலை.!
குறைகள் இருந்தாலும் அவை பெரும்பாலும் கதையின் கொள்கை சார்ந்த வசனங்களால் தான் .! காட்சிகளும் நீ.. ள .. ம் ! பிரசார தொனி அப்பட்டமாக தெரிகிறது.
–தேவிமணி