ஒரு படத்துக்கு தேவையான அளவு இப்படியாக புரமோஷன் செய்திருக்கிறார்கள். அதனால் மாணிக்கம் என்கிற பெயர் ஓரளவு பிரபலமாகி இருக்கிறது.
சரிய்யா ,அந்த அளவுக்கு நல்ல சரக்குதானா ,மாணிக்கம் கல்லா கட்டுவாரா ?
பார்த்துடுவோம் அதையும்.!
கேரளத்தில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இயக்குநர் நந்தா பெரியசாமியின் ஆதாரம். கேரளம் ,தமிழநாடு இரண்டின் அடித்தள மக்களின் நிஜத்தை கதையாக்கி இரண்டு மணிக்கும் அதிகமாக டைம் எடுத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார். கதையை நான் விரிவாக சொல்லப்போவதில்லை.
எல்லையோர ஊர் குமுளி . கேரள ,தமிழக இரண்டு மாநில மக்கள் சங்கமிக்கும் பரபரப்பான ஊர். குருவிக்கூடு சைஸில் பெட்டிக்கடை வைத்திருக்கிற சமுத்திரக்கனிக்கு கேரள லாட்டரி சீட்டுகளை விற்பது பிரதான தொழில் .
பாரதிராஜா வாங்கிய சீட்டுக்கு ஒன்னரை கோடி பரிசு விழுந்திருப்பதாக ஆளை தேடுகிறார் பெட்டிக்கடை மாணிக்கம் சமுத்திரக்கனி.
“அந்தாளுதான் காசு கொடுக்கலியே ,அப்ப அந்த சீட்டு நமக்குதானே சொந்தம் ,ஒன்னரைக் கோடியும் வீடு வந்து சேரவேண்டும் “என்று மாணிக்கத்தின் சம்சாரம் அனன்யா கெடு வைக்கிறார். அநியாயத்துக்கு நேர்மையான மாணிக்கம் தன் மனைவி,உற்றம் சுற்றம் கடந்து பாரதிராஜாவை தேடி பயணிக்க, என்னவாகிறது லாட்டரி சீட்டு என்பதுதான் கதை.. திரு என அடைமொழி கொடுத்திருப்பதே மாணிக்கத்தின் சிறப்பு மற்றும் உயர்வை சொல்லி விடுகிறது.
மாணிக்கத்துக்கு சரியான ஆளை தேர்வு செய்திருந்ததற்காக படக்குழுவுக்கு பாராட்டுகள். தண்ணீர் மாதிரி சமுத்திரக்கனி. எந்த பாத்திரத்திலும் நிரப்பிக்கொள்ளலாம். வாய்மை தவறாத மனிதர் என்பதற்கு குறள் வழி பொருள் சொல்வதை குறியீடாகக் கொள்ளலாம். இப்படியும் ஒரு மனுசன் இருக்க முடியுமா என்று அவ்வப்ப குருவி வந்து நம்மைக் கொத்தினாலும் கனியின் முகம் வந்து கண்முன் ஆஜராகிவிடுகிறது .கோடியில் ஒருவனய்யா !
கைப்பையில் இருந்த லாட்டரி சீட்டு மழைத்தண்ணீரில் அடித்து செல்லப்படுகிற போது அந்த மனிதன் படுகிற பாடு ,அவஸ்தை, எல்லாம் நேர்மைக்கு கொடுக்கும் விலை.
நாயகனின் மனைவி அனன்யா. இயக்குநர் நந்தா பெரியசாமியின் தேர்வு மிகச்சிறப்பு. இப்படியான ஒருத்தி நம்ம வாழ்க்கையிலும் வந்திருந்தா எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று ஒவ்வொருவரும் நினைக்காமல் இருந்திருக்க முடியாது. லட்சுமி கடாட்சம் !
எந்த வயதாக இருந்தால் என்ன வலம்புரி சங்குய்யா பாரதிராஜா ! “அந்த சீட்டுக்கு நான் காசு கொடுக்கல . அதனால பரிசு உனக்குத்தான் “என கனியிடம் மறுத்து சொல்கிறபோது மேன் மக்கள் மேன்மக்களே.! “எனக்கே நடிப்பு சொல்லிக் கொடுக்கிறியா ?” என்கிற அந்த குரலில் எக்கசக்க உண்மை இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இமயம் பெருமை குறைவதில்லை .
காமடி என்கிற பெயரில் ஈரத்துணியைப் போட்டு கழுத்தை அறுத்திருக்கிறார் தம்பி ராமையா !நல்ல கேரக்டர் ஆரட்டிஸ்ட்.கெடுத்திருக்கிறார்கள் . கிராமத்துப் பஸ்சில் பயணம் செய்கிற இங்கிலாந்துப் பேர்வழியினால் இந்த கதைக்கு சல்லிக்காசு உதவி கிடைத்திருக்குமா ?. பிறகேன் திணித்தல் ?
இசை விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு சுகுமார். கேரளத்தின் பசுமை இயற்கையின் வரம். சுகுமாரின் ஒளிப்பதிவு மாணிக்கத்தின் பிரகாசம்.!
தொடக்கம் முதல் முடிவு வரை சீராக பயணிக்கிற திரு மாணிக்கம் காவல் துறையினர் உள்ளிட்ட சிலரை திறம்பட ஏமாற்றியிருக்கிறார். நல்ல எடுத்துக்காட்டு. பேராசை பெருநட்டம். இந்த கதையில் எந்த நடிகரையும் உயர்த்திப் பிடிப்பதற்காக கேரக்டர்களை உருவாக்கவில்லை என்பதற்கு எளிமை நல்ல உதாரணம்.
எனது கருத்து ?
மகுடத்தில் தான் ‘மாணிக்கம் ‘பதிக்கப்பட்டிருக்கிறது . உண்மை நிகழ்வின் பாதிப்பு.
–தேவிமணி