தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2003ம் ஆண்டில் மொழி என்ற படத்தை தயாரித்தார். அதைத்தொடர்ந்து, அல்லு அர்ஜூன்,சிரஞ்சீவி, ரவி தேஜா, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கு தயாரிப்பாளரான இருந்த தில் ராஜூ, நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்து தமிழ் திரைத்துறையிலும் தயாரிப்பாளராக களமிறங்கினார்.இதைத்தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தை தயாரித்தார். இந்த படம் பொங்கல் பாண்டிகைக்கு தியேட்டரில் வெளியானது. ரூ.450 கோடிக்கு தயாரித்த ‘கேம் சேஞ்சர்’ படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் பாடலுக்கு மட்டுமே 75 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கேம் சேஞ்சர் படத்தை எடுப்பதற்காக அவர் வீட்டை அடமானம் வைத்து தான் பணத்தை அதில் முதலீடு செய்வதாக சினிமா பிரபலங்கள் கூறி வந்த நிலையில், இன்று திடீரென தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கோண்டாப்பூர், கச்சிபெளலி , அலுவலகம் என 8 இடங்களில் காலை முதல் 55 வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ’புஷ்பா 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நவீன் எர்னேனி, செர்ரி ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.தமிழில் அஜித்குமார் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய தயாரிப்பாளர்களின் இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுவது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.