‘யசோ ‘என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் டாக்டர் எம்.சத்யா தயாரித்துள்ள புதிய படத்துக்கு ‘கருப்பு பல்சர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ‘அட்டகத்தி’ தினேஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க , ரேஷ்மா வெங்கட், மதுனிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இவர்களுடன் மன்சூர் அலிகான் ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், சரவண சுப்பையா, பிரின்ஸ் அஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ள முரளி கிரிஷ் கூறியதாவது,” நகைச்சுவை திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தின் மூலம் ‘அட்டக்கத்தி’ தினேஷ், தசரத ராஜா, கருப்பு என முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதன் கதைக்களம் சென்னை மதுரை என பயணப்படுகிறது. இதன் 70 சதவீத படப்பிடிப்பு சென்னையிலும், 30 சதவீத படபிடிப்பு மதுரையிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மதுரையில் வசித்து வரும் நாயகன் கருப்பு, அங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி ஒன்றில் கலந்துகொண்டு காளையை அடக்கி, அதற்கு பரிசாக, கருப்பு நிற ‘பல்சர் பைக்’ ஒன்றை பெறுகிறார். சென்னையில் மற்றொரு நாயகனான தசரத ராஜா, அக்மார்க் சென்னை பையனாக பட்ஜெட் போட்டு,தான் உண்டு தனது வேலையுண்டு என வாழ்க்கையை நடத்தி வரும் பொறுப்புள்ள இளைஞனாக வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதைத் தான் அதிரடி நகைச்சுவை படமாக்கி இருக்கிறேன். இப்படத்தில் இடம்பெறும் ஜல்லிக்கட்டு காட்சியை லைவ் வாக மதுரையில் படமாக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் சில காரணங்களினால் அங்கு எடுக்க முடியவில்லை. இதனால் தஞ்சாவூரில் முறைப்படி அனுமதி வாங்கி, லைவ்வாக படம் ஆககினோம். அட்டகத்தி தினேஷ் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ‘டூப்’ போடாமல் காளையை எகிறிப் பிடிக்கும் காட்சியில் நடித்து அசத்தினர். இக்காட்சியை மொத்தம் நாலு கேமராக்கள் வைத்து படமாக்கினோம். சில காட்சிகளை சிஜி செய்திருக்கிறோம்.மொத்தம் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், 23 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து விட்டோம் என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை பாஸ்கர் ஆறுமுகம் கவனிக்க, இன்பராஜ் இசையமைத்துள்ளார்.