மாதா பிதா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், தமிழ் திரையுலகில் முதன்முறையாக 21 துறைகளை கையாண்டு டாக்டர் குகன் சக்கரவர்த்தியார் இயக்கி நடித்துள்ள புதிய படம், ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’. இப்படத்தில் குகன் சக்கரவர்த்தியார், ஜெயஸ்ரீ, பிரபாத், அலினா ஷேக், பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 28 ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் குகன் சக்கரவர்த்தியார் கூறுகையில்,, “நம் மக்களின் அழகான வாழ்வியலுடன் டாக்டர் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. வங்கக்கடல் கரையோரம் சென்னையில் நமது திராவிட பெருந்தலைவர்களான அண்ணா, கருணாநிதி,எம் ஜி ஆர் ,ஜெயலலிதா ஆகியோர் துயில் கொண்டுள்ளனர். இதன் மற்றொரு எல்லையான ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜெ அப்துல் கலாம் நினைவிடம் உள்ளது. இவர்களின் நல்ல கருத்துகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு இப்படத்தின் மூலம் தமிழக முதல்வரிடம் ஒரு முக்கிய கோரிக்கையை முன் வைக்கிறேன். அது என்ன என்பது திரைப்படம் வெளியானவுடன் தெரியும்,” என்கிறார்.