ஈ 5 என்டர்டைன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஜே.பி. தினேஷ்குமார் மேற்கொண்டுள்ளார். காதலர் தினத்தன்று இப்படத்தின் ‘வாலண்டைன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் சிவபிரகாஷ் பேசுகையில்,
”கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.” என்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.