டான்களுக்கெல்லாம் டானாக இருப்பவர், ‘ரெட் டிராகன்’ என்று அழைக்கப்படும் அஜித் குமார். இந்தியாவில் வசித்துவரும் இவருக்கும் த்ரிஷாவுக்கும் திருமணமாகிறது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் பிறக்கிறான். அதன் பிறகு, அவரது மனைவி த்ரிஷாவின் வற்புறுத்தலின் பேரில், தானாக சிறைக்கு செல்கிறார். அஜித்குமார் செய்த குற்றங்களுக்காக சுமார் 18 வருடங்கள் தண்டனை கிடைக்கிறது.
இந்நிலையில், த்ரிஷா தனது தந்தை பிரபு, சகோதரன் பிரசன்னா மற்றும் தனது மகனுடன் ஸ்பெயினில் செட்டிலாகிறார். அஜித்குமாரின் தண்டனை காலம் முடிய இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், ஸ்பெயினில் வசித்துவரும் அவரது மகன் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்படுகிறார். இதனால் த்ரிஷா, தனது மகனை, அஜித்குமாருடைய எதிரிகள், அவரை பழி வாங்க, நயவஞ்சகமாக மகனை சிக்க வைத்துள்ளனர். எனக் கூறி, அஜித்குமாரிடம் சண்டையிடுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை, ஒரு தீவிர அஜித்குமார் ரசிகரின் பார்வையில் சொல்லும், திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ் தான், ‘குட் பேட் அக்லி’.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், அஜித்குமார் ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் தலைமையில், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அஜித்குமாரும் இயக்குநரின் விருப்பப்படி?! நடித்திருக்கிறார்!
‘ரெட் டிராகன்’ மற்றும் ‘ஏ.கே’ என அஜித் குமார், தனது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக மாஸ் காட்டியிருக்கிறார். நடை, உடை, பாவனை என அனைத்திலும் மாஸ்.. பக்கா.. மாஸ்! ஆக்ஷன் காட்சிகளிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும், த்ரிஷா – சிம்ரன் இவர்களுடனான ரொமேன்ஸ் காட்சிகளிலும் மனம் கவர்கிறார்.
அஜித்தின் மனைவியாக நடித்திருக்கும் திரிஷா. பக்காவாக, அந்த கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார். இருவருக்குமான நெருக்கமான காட்சிகள் இல்லாதது, ஏமாற்றம்.
அஜித்துக்கு அடுத்தபடியாக, மாஸ் காட்டியிருப்பது அர்ஜுன் தாஸ். அஜித்தின் வில்லனாக நடித்திருக்கும் அவர், ஜானி மற்றும் ஜாமி என்ற கதாபாத்திரங்களில் மிரட்டியிருக்கிறார். அவருக்கான இன்ட்ரோ சீனிலேயே, சீன் காட்டியிருக்கிறார். அஜித் காட்டிய மாஸுக்கு ஈக்குவலாக மிரட்டியிருப்பது சிறப்பு. “ஒத்த ரூபாயும் தாரேன்…” மற்றும் “தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா…’ ஆகிய பாடல்களுக்கு அவர் போடும் ஸ்டெப்ஸ், கிளாப்ஸுகளை அள்ளுகிறது.
மற்றபடி சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு, சிம்ரன், சைன் டாம் ஜாக்கோ, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களில் ஜாக்கி ஷெராப்பின் இன்ட்ரோ சீன் தூள்!
ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் மொத்தப்படத்தையும் ரசித்து, ரசித்து படமாக்கியிருக்கிறார். இவரது ஒளிப்பதிவு படத்தின் பெரும் பலமாக இருக்கிறது. அஜித்தை மட்டுமல்லாது அனைவரையுமே, சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மொத்ததில் கலர்ஃபுல்லான காட்சிகளால், பிரமாண்டப் படுத்தியிருக்கிறார். சுப்ரீம் சுந்தர் வடிவமைத்த சண்டைக்காட்சிகளை, சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, மசாலாப்படங்களுக்கே உரித்தானதாக இருக்கிறது. கதைக்கும், காட்சிகளுக்கும் ஏற்றபடி பின்னணி இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே வெற்றி பெற்ற பாடல்களை, சிறப்பாக ரீமேக் செய்திருக்கிறார்.
சுப்ரீம் சுந்தர் வடிவமைத்த சண்டைக்காட்சிகள், அனு வர்தனின் ஆடை வடிவமைப்பு, ஜி.எம்.சேகரின் ஆர்ட். என இவர்களது பணி சிறப்பாக திரையில் தெரிகிறது.
மொத்தத்தில், எழுதி இயக்கியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமாரை வைத்துக்கொண்டு பெரிய கமர்ஷியல் மசாலாவை கொடுத்து, அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்.