ஒரு இரவு நேரத்தில், 10 மணி நேரத்திற்குள் நடக்கும் குற்றச்சம்பவங்களே ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தின், விறுவிறுப்பான சஸ்பென்ஸ், க்ரைம் த்ரில்லர்!
‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தில் சிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, ஷருமிஷா, நிரஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், இளையராஜா கலியபெருமாள். ஒளிப்பதிவு, ஜெய் கார்த்திக். இசை, கே.எஸ்.சுந்தரமூர்த்தி.
கேஸ்ட்ரோ (சிபிராஜ்) சேலம் மாவட்ட, காவல் எல்லைக்குட்பட்ட ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவரது போலீஸ் ஸ்டேஷனில், இளம் பெண் ஒருவர் காணாமல் போனதாக கம்ப்ளையின்ட் வருகிறது. கேஸ்ட்ரோ , அந்த புகாரை முன்னெடுப்பதற்குள், சென்னையிலிருந்து தெற்கு நோக்கிச்செல்லும் ஒரு பேருந்தில், இளம்பெண்ணை கொடுமை படுத்துவதாக புகார் வருகிறது. அந்தப்பேருந்தினை மடக்கி சோதனை செய்தபோது, ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். பஸ்ஸிலிருக்கும் அனைவரையும் விசாரணை செய்கின்றனர். ஆனால் கொலையாளியை நெருங்க முடியவில்லை.
காணாமல் போன இளம்பெண் கிடைத்தாரா, இளைஞரை கொலை செய்தது யார்? என்பதுதான் ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
சிபிராஜ், நீண்ட நாட்களுக்குப்பிறகு அனைவரையும் கவரும் விதத்தில் நடித்திருக்கிறார். கடமை தவறாத, கண்டிப்பான, நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் கேஸ்ட்ரோ கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் விசாரணை செய்யும் காட்சிகளில், இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருந்தால், இன்னும் சூப்பராக இருந்திருக்கும்.
மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் முருகதாஸ், ஜீவா ரவி, தங்கதுரை, வில்லனாக நடித்திருக்கும் திலீபன், சப்–இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், தேர்தல் அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.
இப்படத்தில், அனைத்து காட்சிகளுமே இரவில் நடக்கிறது. அப்படியான, இரவில் நடக்கும் காட்சிகளை, ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக் சிறப்பாக படம்பிடித்திருக்கிறார். இவரது ஒளிப்பதிவு, திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை, சுமார்!
மற்றபடி, எழுதி இயக்கியிருக்கும் இளையராஜா கலியபெருமாள், யூகிக்க முடியாத காட்சிகளாக, சுவாரசியமான திரைக்கதை அமைத்து, ரசிக்கும்படியாக ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தினை கொடுத்துள்ளார்.
‘டென் ஹவர்ஸ்’ – ரசிக்கலாம்!