மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது கூட்டத்தில் , தி.மு.க சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ராஜ்யசபா (மாநிலங்களவை) இடத்திற்கான வேட்பாளராக அக்கட்சி தலைவர் கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ், ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள 6 தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், ம.நீ.ம கட்சியின் வேட்பாளராக, தலைவர் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும், கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு இணைந்து ஏகமனதாக இதை முடிவு செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், மாநிலங்களவை தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசனுக்கு தங்களது ஆதரவை தரும் படி, தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. தி.மு.க. வேட்பாளர்களாக 1. திரு. பி.வில்சன் பி.எஸ்சி, பி.எல்., 2. திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம் 3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் ” இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன். மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் ம.நீ.ம.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது