நடிகர் ராஜேஷ் கடந்த 1949 இல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்தார். திண்டுக்கல், வடமதுரை, மேலநாதம் அணைக்காடு, சின்னமனூர் தேனி மாவட்டங்களில் பள்ளிப்படிப்பை முடித்தார் .காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி. யு. சி முடித்த பிறகு, இவர் பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். புரசைவாக்கத்தில் உள்ள புனித பவுல் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் 1972 முதல் 1979 வரை திருவல்லிக்கேணியிலுள்ள கெல்லெட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.இந்நிலையில்,கடந்த 1974ல், அவள் ஒரு தொடர்கதை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து 1979-ல் ராஜ்கண்ணு தயாரித்த கன்னிப்பருவத்திலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.தொடர்ந்து கே. பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தில் ராஜேஷ் நாயகனாக நடித்தார். பாக்கியராஜின் அந்த 7 நாட்களில் இவர் ஏற்று நடித்த டாகடர் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர், குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.கமல்ஹாசனுடன் சத்யா, மகாநதி, விருமாண்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார்,கடைசியாக விஜய் சேதுபதி நடித்த இந்தி படமான மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் நடித்திருந்தார்..1983 ல், சமூக சீர்திருத்தவாதியும் திராவிடத் தலைவருமான பட்டுக்கோட்டை தாவிசு வனத்திராயரின் பேத்தியான ஜோன் சிலிவியா வனத்திராயரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவ்யா என்ற ஒரு மகளும், தீபக் என்ற ஒரு மகனும் உள்ளனர். நடிகர் ராஜேசின் மனைவி கடந்த 2012 -ல் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வந்தார்.இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் மெர்ரி கிறிஸ்துமஸ். இவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி ,உடல் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களுடன் பேட்டி எடுத்து வந்தார். இந்நிலையில், 45 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் நடிகர் ராஜேஷ் ( வயது 75.) திடீரென இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அவரை குடும்பத்தினர் உடனடியாக ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால், போகும் வழியிலேயே 8:15 மணியளவில் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.நடிகர் ராஜேஷின்உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அவரது மகள் திவ்யா வரும் 31 தேதி சென்னை வருகிறார்.இதையடுத்து அவரது உடல் அடக்கம் வரும் 1ம் தேதி காலை 11 மணியளவில் நடக்கிறது.இவரின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள்மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
. நடிகர் ராஜேஷ் மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,”-தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்ததோடு, பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ். முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். கலைஞரும், ராஜேஷின் திருமணம் முதலிய அவரது இல்ல நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொண்டு வாழ்த்துவது வழக்கம்.கலைஞர் மறைவுற்றபோது, \”தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவர் ஓர் அங்கம்\” என நெகிழ்ச்சியோடு பேசி தனது இரங்கலைத் தெரிவித்தவர் ராஜேஷ் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். திரைத்துறையில் அவரது நீண்ட அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர்கமல்ஹாசன்தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்
ராஜேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,”என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்”.இவ்வாறு அவர் கூறியுள்ளார்