தக் லைஃப் திரைப்படத்தினை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’, ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ தயாரித்திருக்க, ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்திய சினிமாவின் மிகப்பெரும் அடையாளங்களாக திகழும், கமல்ஹாசன், மணிரத்னம், ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்களின் கூட்டணியில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் படம், தக் லைஃப்! அவ்வாறான, ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திருக்கிறதா? பார்க்கலாம்.
டெல்லியில், இருக்கும் தாதாக்களில் (கமல்ஹாசன்) ரங்கநாயக சக்திவேல் நாயக்கன் முக்கியமான ஒரு தாதா. தனது அண்ணனான (நாசர்) பெருமாள், தலைமையில் உருவான தாதா சாம்ராஜ்ஜியத்தை திறம்பட நடத்தி வருகிறார். அப்போது, இன்னொரு தாதா மகேஷ் (மஞ்ச்ரேகர்) சதானந்துடன் நடக்கும் மோதலில் (குமரவேல்) பேப்பர் போடுபவர் சுட்டுக்கொல்லப்படுகிறார். இதன் காரணமாக (சிலம்பரசன் டி ஆர்) அமரன் மற்றும் அவரது (ஐஸ்வர்யா லக்ஷ்மி) தங்கை சந்திராவும் திக்கற்றவர்களாக ஆகிறார்கள். இதில், அமரனுக்கு சக்திவேலின் ஆதரவு கிடைக்கிறது. வருடங்கள் பல சென்ற நிலையில், சக்திவேல் ஒரு குற்றத்திற்காக சிறைக்கு செல்கிறார். தாதா சாம்ராஜ்ஜியத்தினை அமரன் நிர்வகிக்கிறார். ஜெயிலில் இருந்து வரும் சக்திவேலுக்கும் அமரனுக்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக மோதல் உருவாகிறது. இதனால், பெருமாள் மற்றும் அமரன் இருவரும் சக்திவேலை கொல்லத் திட்டமிடுகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே உலகத்தரத்திலான ‘தக் லைஃப்’ திரைப்படத்தின், விறுவிறுப்பான, எமோஷனல், ஆக்ஷன், டிராமா திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
‘ரங்கநாயக சக்திவேல் நாயக்கன்’ என்ற கதாபாத்திரத்தில், ‘கலைஞானி’ கமல்ஹாசன் அவரது நடிப்பின் மூலம், மீண்டும் உச்சம் தொட்டிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும், வித்தியாசமான, திரைக்கதைக்கேற்றபடி நடித்து, ரசிகர்களை வியப்பில் ஆற்றுகிறார். அவரது அறிமுக காட்சியே அட்டகாசம். அதிலிருந்து ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பு. அதில், கமல்ஹாசனின் சிக்நேச்சர் முத்தக்காட்சியும் உண்டு! என்பது கூடுதல் சிறப்பு. காதலுடன் ஊடல் கொள்ளும் (அபிராமி) மனைவியுடனும், சல்லாபம் கொள்ளும் (த்ரிஷா) வப்பாட்டியுடனுமான காட்சிகளாக இருந்தாலும், வெவ்வேறு விதமான நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார். இளமை, நடுத்தர வயதான, வயதான தோற்றங்களிலும் சிறப்பாகவே தோற்றமளிக்கிறார். சண்டைக்காட்சிகளில் மாஸ் காட்டி நடித்திருக்கிறார். குறிப்பாக ஜோஜு ஜார்ஜுடனான சண்டைக்காட்சி! அதைவிட அல்ட்டிமேட், க்ளைமாக்ஸில் சிலம்பரசன் டி ஆர் உடன் மோதும் சண்டைக்காட்சி! அபிராமியுடன் நடித்த காட்சிகளில், சில வற்றில் கண்களில் நீர் கசியவும் செய்து விடுகிறார்.
தக் லைஃப், ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா என்பது போல் படத்தின் இன்னொரு நாயனாக சிலம்பரசன் டி ஆர். காருடன் சீறிப்பாயும் அறிமுக காட்சியிலேயே ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். இந்தக்காட்சியினை அவரது ரசிகர்கள் கொல மாஸ் என கொண்டாடும் காட்சி. ஸ்லிம்மா, சூப்பராக படம் முழுவதும் திரையை ஆக்கிரமித்து விடுகிறார்! கமல்ஹாசனுடன் இணக்கமாக இருந்த போதும், எதிர்க்கும் போதும் இரு வேறுவிதமான நடிப்பின் மூலம் ஈர்க்கிறார். இடைவேளையின் போது கொடுக்கும் ஒரு போஸ், மாஸ்! ஸ்டைலிஷ் லுக்!! திரிஷாவுடன் வம்பு செய்யும் போதும் ரசிக்க வைக்கிறார். தொடர்ந்து நடிப்பின் மீது கவனம் செலுத்தினால், வேற லெவல் சிம்புவாக வலம் வரலாம்.
கமல்ஹாசனின் மனைவியாக அபிராமி, சிம்ப்ளி சூப்பர்! ‘ஜீவா’ என்ற கதாபாத்திரத்தின் மூலமாக, ஒரு நல்ல பெர்ஃபார்மென்சை கொடுத்திருக்கிறார்.
நட்சத்திர இரவு விடுதியில் ஆடும் அழகியாக த்ரிஷா! அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தனி துணிச்சல் வேண்டும். மிகப்பெரிய தாதாவின் கள்ளக் காதலியாகவும், இன்னொரு தாதாவின் வலுக்கட்டாயமான காதல் சிறையில், அகப்பட்ட பெண்ணாகவும் ‘இந்திராணி’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். கமலுடன் சேர்ந்து நடித்த, இவரது காட்சிகள் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு!
அதிகார போதையில் சிக்கித்தவிப்பவராக வில்லத்தனம் செய்திருக்கும் நாசர், அசோக் செல்வன், வையாபுரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அலி ஃபாசல், சஞ்சனா, மகேஷ் மஞ்சுரேக்கர், வடிவுக்கரசி, பகவதி பெருமாள், பாபுராஜ், ரோஹித் ஷராஃப், அர்ஜுன் சிதம்பரம், சின்னி ஜெயந்த், சேத்தன் என ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களில் சிறப்புடன் நடித்துள்ளனர். இருந்தாலும், ‘ஐஸ்வர்யா லக்ஷ்மி’ (திறமையான நடிகை) மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
திறன்மிகு நடிகர்களின் பங்களிப்பிற்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது, தொழில் நுட்பம். அவற்றில் முதலிடம் ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவு. அவரது வித்தியாசமான கோணங்களும், சண்டைக்காட்சிகளில் துல்லியமான ஒளிப்பதிவும், வாய்பிளக்கச் செய்யும் அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கமல் – ஜோஜூ ஜார்ஜ், கமல் – சிம்பு இவர்களின் சண்டைக்காட்சிகளி சொல்லலாம். இதற்கு, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், எடிட்டிங் போன்ற பிரிவும் பங்கு கொண்டாலும், ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பே! அனைத்து நடிகர்களையும் அழகுற படம் பிடித்துள்ளார்.
ஏ ஆர் ரஹ்மானின் இசையும், பின்னணி இசையும் மொத்தப் படத்தினையும் உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை சூப்பர்! சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள் எமோஷனல் காட்சிகள் என, எல்லாக் காட்சிகளுக்கும் கூடுதலாக பலம் சேர்த்துள்ளது.
அன்பறிவு சகோதரர்களின் சண்டைக்காட்சிகள் சிறப்பு!
ஸ்ரீகர் பிரசாத், எடிட்டிங் நேர்த்தி, சிறப்பு!
தொழில் நுட்பத்தில் சொதப்பியிருப்பது, நேபாளக் காட்சிகளும், க்ளைமாக்ஸ் பாம் பிளாஸ்ட்டும் தான். மற்றபடி பெரிதாக எதுவும் (தெரிய) இல்லை.
எழுதி, இயக்கியிருக்கும் மணிரத்னம், தக் லைஃப் படத்தினை மமூலான ‘தாதா’ கதையாக மட்டுமில்லாமல், மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளான பாசம், அன்பு, காதல், பகை, பழிவாங்குதல் போன்ற, எளிதில் வயப்படும் உணர்வுகள் மூலம் உலகத்தரத்திலான படத்தினை கொடுத்துள்ளார். சில காட்சிகளில், ஒரு சிலருக்கு கண்கள் கசியவும் செய்யும்.
மணிரத்னத்தின் வசனங்கள், சிறப்பு. சில இடங்களில் அனல். கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறது. கமல் மற்றும் சிம்பு சொல்லும், “Madam, I am your only Adam” கூடுதல் சிறப்பு!
மொத்தத்தில், ‘தக் லைஃப்’ பார்த்து ரசிக்க வேண்டிய, எமோஷனல் ஆக்ஷன் ட்ராமா!