‘மார்கன்’ (விமர்சனம்) ரசிக்கக்கூடிய க்ரைம் த்ரில்லர்!

‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ சார்பில், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், வெளிவந்துள்ள படம், மார்கன். இப்படத்தினை, எடிட்டர் லியோ ஜான்பால் இயக்கியிருக்கிறார்முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்க, அவருடன் அஜய் தீஷன், ப்ரிகிடா, தீப்ஷிகா, கனிமொழி, அர்ச்சனா, மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சென்னையில் அழகிய இளம் பெண்கள், கடத்தப்பட்டு விநோதமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அதாவது, கடத்தப்படும் இளம் பெண்களின் உடல் முழுவதும் அடர் கருமையாக மாற்றப்பட்டு கொல்லப்படுகிறார்கள். சென்னை போலீஸார்,  அசிஸ்டென்ட் கமிஷனர் (வினோத் சாகர்) ஒருவரின் தலைமையில், விசாரணையில் இறங்குகின்றனர். ஆனால், சென்னை போலீஸில் ஏடிஜிபி யாக பணியாற்றி வரும் (சமுத்திரக்கனி) ராஜா, இந்த வழக்கினை மும்பை போலீஸ் (விஜய் ஆண்டனி) துருவ் கோரக்கிடம் கொடுக்கிறார். சென்னை வரும் துருவ் கோரக் கொலையாளியை கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பது தான், ‘மார்கன்’ படத்தின் சுவாரசியமான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.

உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணை அதிகாரி துருவ் கோரக், கதாபாத்திரத்தை விஜய் ஆண்டனி எளிதாக கையாண்டிருக்கிறார். அந்த கதாபாத்திரம் அவருக்கே உருவாக்கப்பட்டது போல் இருக்கிறது. விசாரணையை, அடுத்தடுத்து மேற்கொள்ளும் விதமும், கொலையாளியை அவர் நெருங்கும் போதும் படம் பார்ப்பவர்களுக்கு, ஒரு பரப்பரப்பு தொற்றிக்கொள்கிறது. உறவை இழந்த நிலையில், ஒரு பக்க முகம் கருத்த நிலையில் அவர் விசாரிக்கும் தோரனை ரசிக்க வைக்கிறது.

நீச்சல் வீரர், ‘தமிழறிவு’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் அஜய் தீஷன், முதல் படத்திலேயே, அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விடுகிறார். சித்தர் ஆசியுடன் வளர்ந்த தமிழறிவின் கதாபாத்திர வடிவமைப்பு, திரைக்கதைக்கு நம்பகத் தன்மையினையும், பலத்தையும் கொடுத்திருக்கிறது. கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனி விசாரணை செய்யும்போது, இருவேறுவிதமான உணர்வினை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

அஜய் தீஷனின் அப்பாவாக நடித்திருக்கும் ராமச்சந்திரன், திரைக்கதையின் நம்பகத்தன்மைக்கு உதவியிருக்கிறார்.

போலீஸ் ‘ஏடிஜிபி’ யாக  சமுத்திரக்கனி, ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் மகாநதி சங்கர், சில இடங்களில் கலகலப்பூட்டுகிறார்.

மற்றபடி பிரிகிடா, தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள், திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனியின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. குறிப்பாக, பின்னணி இசை அபாரம். என்று தான் சொல்ல வேண்டும். அது, காட்சிகளுக்களின் விறுவிறுப்பினை கூட்டுவதோடு, படம் பார்ப்பவர்களின் கண்கள் திரையிலிருந்து விலகாமல் பார்த்துக்கொள்கிறது. சவுண்ட் இன்ஜினியர் எஸ். சந்திரசேகர், சவுண்ட் டிசைனர் எஸ். விஜய் ரத்தினம் இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு, சிறப்பு. ஒரு சூப்பர் நேச்சுரல், க்ரைம் டிராமாவிற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டுமோ, அப்படி செய்யப்பட்டிருக்கிறது.

படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, மிதமான வேகத்தில் செல்கிறது. ஆனால், க்ளைமாக்ஸ் வரை சுவாரசியமாக செல்கிறது. க்ளைமாக்ஸ் சற்று முன்னர், கொலையாளியை யூகிக்க முடிந்து விடுகிறது. அதற்கான காரணம் சற்று ஏமாற்றம்.

இப்படத்தில், அறிமுக இயக்குநர் லியோ ஜான்பாலும்,  அறிமுக நடிகர் அஜய் தீஷனும்  பளிச்சென கவனம் பெறுகின்றனர்.

இயக்குநர், எடிட்டர் லியோ ஜான்பால், குப்பைத்தொட்டியில் பிணம் இருப்பதை பார்க்கும், துப்புரவுத்தொழிலாளியின் காட்சியைக் கூடுதல் கவனத்துடன் காட்சிப்படுத்தியிருக்கலாம். அந்தக்காட்சியில் இயக்குநராகவும், எடிட்டராகவும் அவர் தோற்றுப்போயிருக்கிறார். அதேபோல் கொலையாளி, விஜய் ஆண்டனியின் மகளை குறி வைத்ததில், போதிய காரணம் சொல்லப்படவில்லை! இப்படி, சில குறைகள்.

மற்றபடி, ‘மார்கன்’ ஒரு நல்ல ரசிக்கக்கூடிய க்ரைம் த்ரில்லர்!