விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி, அதிரடி ஆக்சன் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் ‘பீனிக்ஸ்’. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, இணையவாசிகளிடம் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட சூர்யா சேதுபதியின் நடிப்பு + திரைத் தோற்றம்.. எப்படி இருக்கிறது.
வடசென்னையில் கடற்கரை ஓரம் உள்ள குப்பம் ஒன்றில் தேவதர்ஷினி தனது கர்ணா( விக்னேஷ்- காக்காமுட்டை ) சூர்யா ( சூர்யா சேதுபதி) என்ற இரண்டு மகன்களுடன் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நடத்துகிறார். இவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் நன்றாக கல்வி கற்க வேண்டும் அல்லது நன்றாக விளையாடி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசாங்க உத்தியோகம் கிடைக்க வேண்டும். இந்த இரண்டு வாய்ப்பு மட்டும்தான் இவர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் கர்ணாவும், சூர்யாவும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குத்து சண்டை விளையாட்டை தேர்ந்தெடுத்து அதில் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கரிகாலன் ( சம்பத் ராஜ்) இத்தகைய போட்டியில் வெற்றி பெற்றால்.. அவர்களுக்கு துறைமுகத்தில் அரசாங்க வேலையையும், 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கிறார். இந்த போட்டியில் கலந்து கொண்டால் வெற்றி பெறலாம் என்றும், தங்களுடைய வாழ்க்கை நிலை உயரும் என்றும் கர்ணாவும்.. சூர்யாவும்.. திட்டமிட்டு கடுமையாக பயிற்சியை மேற்கொள்ள தொடங்குகிறார்கள். அந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் கர்ணாவும், சூர்யாவும் பல தடைகளை கடந்து வெற்றி பெறுகிறார்கள். இறுதிப் போட்டியில் கர்ணா வெல்லட்டும் என சூர்யா விட்டுக் கொடுக்கிறார். அதனால் இறுதிப்போட்டியில் கர்ணா களம் காண்கிறார். வெற்றியும் பெறுகிறார். அரசாங்க வேலையும் கிடைக்கிறது. நிதி உதவியும் கிடைக்கின்றது. ஆனால் அடுத்த நாளே கர்ணா காணாமல் போகிறார். அதன் பிறகு அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார் என கூறி, காவல்துறை ஒருத்தரை கைது செய்கிறது. இது பொய் என்று அறிந்து கொள்ளும் சூர்யா …தன் சகோதரனின் மரணத்தின் பின்னணி என்ன? என்பதை ஆராய கிளம்புகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் இப்படத்தின் சுவாரசியமான கதை.
’பீனிக்ஸ்’ – வீழான் படத்தின் இயக்குநர், சண்டை பயிற்சி இயக்குநர் என்பதால் ஆக்சன் காட்சிகள் அதீதமாக இருக்கிறது. அதனால் இது ஆக்சன் படங்களை விரும்ப்பிபார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே சூர்யா சேதுபதியின் முகம் ரசிகர்களுக்கு பரிச்சயமாவதை விட .. அவருடைய ஆக்சன் காட்சிகள் தான் அறிமுகமாகிறது. சூர்யா சேதுபதியும் ஆக்சன் ஏரியாவில் நன்றாக கவனம் செலுத்தி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக யாரையும் நடிக்க வைக்காமல் இருந்தது ஒரு சின்ன குறை.
18 வயது நிறைவு செய்யாத ஒரு இளைஞனை நீதிமன்ற வளாகத்திற்குள் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் ஆட்கள் கொலை செய்வதற்காக கலவரத்தை ஏற்படுத்துவதெல்லாம் கொஞ்சம் டூ மச். வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதையாக இருந்தாலும்.. வாக்களிப்பதற்கு கூட தகுதி இல்லாத ஒருவன்.. மக்களின் பிரதிநிதியை வன்முறை மூலம் கொலை செய்வதும் ஓவர் தான்.
இளம் குற்றவாளிகளாக நடித்திருக்கும் அனைவரும் ரசிகர்களை பயமுறுத்துகிறார்கள். பொதுவாக பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்காக சமுதாயத்துடன் முதன் முதலாக அறிமுகமாகும் இளம் தலைமுறையினர் ..இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு சமுதாயத்தின் மீது அச்சம் கொள்வது உண்மை.
இதனை படைப்பாக பார்க்க நினைத்தால் முதல் பாதி ஆக்சன் அதிரடி இரண்டாம் பாதி பேமிலி சென்டிமென்ட் என சொல்லி இருக்கும் இயக்குநரின் கமர்சியல் ஃபார்முலா ஓகே.
சூர்யா சேதுபதியை கடந்து அவரது தாயாக நடித்திருக்கும் தேவதர்ஷினி மனதில் இடம் பிடிக்கிறார். கரிகாலன் எம்எல்ஏவாக நடித்திருக்கும் சம்பத் ராஜ் சிறிய இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை ரகளையாக இருக்கிறது. அற்புதமான திரையரங்கு அனுபவத்தையும் வழங்குகிறது.
போட்டியில் வென்றால் துறைமுகத்தில் அரசாங்க பணி மற்றும் இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி என்ற அறிவிப்பும்.. அதனை நடத்தும் சட்டமன்ற உறுப்பினர், தன் மகன் தான் வெற்றி பெறவேண்டும் என அவர் திட்டமிடுவதும் ஏன் ? என்பதுதான் புரியவில்லை.
மொத்ததில் ’பீனிக்ஸ்’ – வீழான், ஆக்சன் பிரியர்களுக்கான படம்!