தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அருணா. இவர் கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சிவப்பு மல்லி, கரிமேடு கருவாயன், டார்லிங் டார்லிங் டார்லிங், முதல் மரியாதை, பெண்மணி அவள் கண்மணி, இதயத்தை திருடாதே உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 1987-ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே விலகினார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். சமீப காலமாக அருணா யு டியூப் தளத்தில் சமையல் குறித்து நிகழ்ச்சிநடத்தி வருகிறார்.தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். சென்னை ஈசிஆர் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவரது கணவர் மோகன் குப்தா வீட்டின் உள் கட்டமைப்பு மற்றும் அலங்கார பணிகள் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இந்நிலையில் மோகன் நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில்,நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள அவரது வீடு, அலுவலங்களில் மூன்று கார்களில் வந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.