இந்த ‘மதுரை 16’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன், இயக்குநர் பேரரசு,சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன், நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இயக்குநர் ஜான் தாமஸ் பேசும் போது,
‘எந்தத் தயாரிப்பாளரும் முழுப் பணத்தையும் வைத்துக் கொண்டு படம் பண்ணுவது கிடையாது.பல்வேறு சிரமங்கள் மத்தியில்தான் படத்தை எடுக்கிறார்கள்.ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தில் இருந்து சினிமா மீது காதலுடன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்.நான் கல்லூரியில் தயாரிப்பாளரின் மாணவர் மட்டுமல்ல, கல்லூரியில் அவர்களுடன் பணியாற்றியும் இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது நாடகங்களைக் குறும்படமாக எடுத்துக் கொடுத்தால் ரசிக்கப்படும் என்று அந்த முயற்சிகளைச் செய்திருக்கிறோம்.இந்த முயற்சியின் 11 ஆண்டுகால விளைவாக இன்று ஒரு பெரிய படத்தை எடுத்திருக்கிறோம்.கஷ்டப்படுங் கள் லட்சியத்தை கனவாகக் கொண்டு உழைத்தால் அடைய முடியும் என்று தயாரிப்பாளர் எனக்கு ஒரு குருவாக சொன்னதை இன்று நான் பார்க்கிறேன்.படித்தவன் படம் எடுத்தால் நான்கு பேருக்குப் பாடம் சொல்வது போல் இருக்கும். இந்தப் படமும் ஒரு பாடமாக இருக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும்போது,
“இது ஆடியோ வெளியீட்டு விழா போலத் தெரியவில்லை. ஒரு கல்லூரியில் பாடம் எடுப்பது போல் தெரிகின்றது.நானும் பேரரசும் நிறைய இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறோம்.
இங்கே ரோபோ சங்கர் வந்திருக்கிறார். எல்லாரும் இப்படி வர மாட்டார்கள். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் எல்லோரும் நன்றாக இருப்பார்கள்.
இந்தப் படத்தை ஒரு பெண்மணியாக தைரியமாக எடுக்க முன்வந்த ஸ்ரீதேவி,உங்கள் துணிச்சல் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும். ஒரு விஜய் நடிகராக இருந்து தலைவராகப் போய்விட்டார். இன்னொரு விஜய் வந்திருக்கிறார். அந்த விஜய் கூட ‘நாளைய தீர்ப்பு’ சமயத்தில் சுமாராகத்தான் இருப்பார். இந்த விஜய்
தம்பிக்கும் நாலு படம் வந்தால் உருவமே மாறிவிடும் இது சினிமாவில் இயற்கை.
300 கோடியில் எடுக்கிற படத்திற்கும் தியேட்டரில் டிக்கெட் விலை 100-150.இந்த படத்திற்கும் அதே விலை என்றால் ஏழை மக்கள் எப்படிப் படம் பார்ப்பார்கள்? இதைப் போன்ற படங்கள் என்றால் ஒரு 60 ,80 ,100 என்று டிக்கெட் விலைகளை நிர்ணயிக்க வேண்டும். தமிழக முதல்வர் சிறு முதலீட்டுப் படங்களுக்கு டிக்கெட் விலையைக் குறைத்து ஏழைகளைப் படம் பார்க்க வைக்க வேண்டும். டிக்கெட் கட்டணம் இப்படி இருப்பதால் ஏழைகள் திரையரங்கு வருவதற்குப் பயப்படுகிறார்கள்.
என்றும் நல்ல படங்களை மக்கள் வரவேற்பார்கள் .சமீபத்திய ஐந்தாறு மாதங்களில் சின்ன படங்கள் தான் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. மக்கள் கதையைத்தான் பார்க்கிறார்கள். கதாநாயகனை யாரும் பார்ப்பதில்லை.பெரிய பெரிய கதாநாயகர்கள் நடித்த படங்கள் எல்லாம் சரியாக இல்லை.
மணிரத்னம் பெரிய இயக்குநர், கமலஹாசன் பெரிய நடிகர் தான் . ஆனால் ‘தக் லைஃப்’ சரியாக இல்லை என்கிறார்கள்.மக்கள் விரும்பவில்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைச் சார்ந்தவர்கள் எடுத்திருக்கும்’ மதுரை 16′ படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் “என்றார்.
விழாவில் விஎஃப் எக்ஸ் பார்த்தசாரதி பிரசன்னா, நடிகர்கள் மதுரை பிரசன்னா, துருவன்,தயாரிப்பாளரின் நண்பர்கள் செந்தில், டைகர் சக்கரவர்த்தி, கள்ளக்குறிச்சி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடங்கும் முன்பு பறை இசைக்கலைஞர்களின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.