ராகுல் மூவி மேக்கர்ஸ் & அபிமன்யு கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், மாயக் கூத்து. இதில் நாகராஜன் கண்ணன், டெல்லி கணேஷ், மு. ராமசாமி, காயத்ரி, சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுந்தர் ராமகிருஷ்ணன், படத்தொகுப்பாளர் நாகூரான், இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன். இயக்குநர் ஏ. ஆர். ராகவேந்திரா. இப்படத்தின் பட்ஜெட் சுமார் 25 லட்சம் என சொல்லப்படுகிறது. இருந்தும், தொழில்நுட்ப கலைஞர்களும், மற்ற கலைஞர்களும் தரமான பங்களிப்பினை தரமாக கொடுத்திருப்பது, ஆச்சர்யத்தினை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தினை ஏற்படுத்துமா? பார்க்கலாம்.
பிரபல எழுத்தாளர் (நாகராஜன் கண்ணன்) வாசன், தொடர் கதைகள் எழுதுவதில் வல்லவர், கர்வம் கொண்டவர். அவர் எழுதிய கதையில், பல கொலைகளை செய்த (சாய் தீனா) தனபால் எனும் ரவுடி அடுத்தாக ஒரு கொலையுடன் ரவுடித்தொழிலை கைவிட விரும்புகிறார். மற்றொரு கதாபாத்திரமான (ஐஸ்வர்யா ரகுபதி) செல்வி மீது திருட்டுப்பழி விழுகிறது. மற்றொரு கதாபாத்திரமான (மிருதுளா) ராஜி மருத்துவராக விரும்பி, அது நடக்காமல் போவதால் தற்கொலை செய்ய முடிவு செய்கிறது. இந்த 3 கதாபாத்திரங்களும், வாசனிடம் நேரில் தோன்றி, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கூறுவதுடன், வாசனை கொலை செய்ய முயற்சிக்கின்றன. வாசன் என்ன ஆனார்? என்பதே ‘மாயக் கூத்து’.
‘மாயக்கூத்து’ என்ற தலைப்பிற்கேற்றபடி கதை அமைந்திருப்பது படத்தின் முதல் வெற்றி. அடுத்தபடியாக தொழில் நுட்பக்கலைஞர்களின் தரமான பங்களிப்பு. ஒளிப்பதிவாளர் சுந்தர் ராமகிருஷ்ணன், படத்தொகுப்பாளர் நாகூரான், இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன் ஆகிய மூவரும் சிறப்பான பாராட்டுதல்களுக்குரியவர்கள்.
எழுத்தாளர் வாசனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் நாகராஜ் கண்ணன், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். தான் உருவாக்கிய கதாபாத்திரங்கள் தன்னிடம் நியாயம் கேட்கும் காட்சிகளில், மிரட்சியுடன், தன்னுடைய உளவியல் சிக்கல்களை (காயத்ரி) மனைவியுடன் பகிரும் போதும் சிறப்பாக நடித்துள்ளார்.
ரவுடியாக நடித்திருக்கும் சாய் தீனா, செல்வியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ரகுபதி, ராஜியாக நடித்திருக்கும் மிருதுளா, அமரர் டெல்லி கணேஷ் , மு. ராமசாமி, காயத்ரி ஆகியோரும், சிறப்பாக தங்களது நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலமாக ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகின்றனர்.
படைப்பாளிகள் உருவாக்கும் படைப்பு எதுவாக இருந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் அது சமூகத்தை நல்வழி படுத்துவதாக இருக்க வேண்டும். என்ற கருத்தை எளிதாகவும், வலிமையாகவும், புதிய வடிவில் சொல்லியிருக்கும் இயக்குநர் ஏ. ஆர். ராகவேந்திரா பாராட்டுக்குரியவர்.
மாயக்கூத்து - சின்ன பட்ஜெட்டில் சிறப்பான படம்.