விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் & ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்து, அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம குமார் இயக்கத்தில், அறிமுக நாயகன் ருத்ரா, மிதிலா பால்கர் , நிர்மல் பிள்ளை, மிஷ்கின், கருணாகரன், கீதா கைலாசம் மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. இதில் விஷ்ணு விஷால், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
திரைப்பட இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக இருக்கும் (ருத்ரா) அஸ்வின், இயக்குநராகும் முயற்சியில் இருந்து வருகிறார். இந்நிலையில், நண்பர் ரெடின் கிங்ஸ்லி மூலம் நடிகர் விஷ்ணு விஷாலிடம் கதை சொல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. சில கதைகளை சொல்லிய நிலையில் எந்தக்கதையும் விஷ்ணு விஷாலுக்கு பிடிக்கவில்லை. அதனால், அஸ்வின் தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு கதையை சொல்கிறார். அந்தக்கதை, விஷ்ணு விஷாலுக்கு மிகவும் பிடித்துப்போகிறது. ஆனால் அந்தக்கதையை எடுப்பதற்கு அஸ்வின் மறுக்கிறார். அது ஏன்? அஸ்வின் இயக்குநராக ஆனாரா, இல்லையா? என்பது தான், ‘ஓஹோ எந்தன் பேபி’.
‘ஓஹோ எந்தன் பேபி’ முழுக்க.. முழுக்க, இன்றைய இளைஞர்களுக்கான கலக்கலான காமெடிப்படம். அறிமுக நாயகன் ருத்ரா, தமிழுக்கு அறிமுகமாகும் நாயகி மிதிலா பால்கர், நாயகனின் நண்பர் என இப்படி பல நடிகர்கள் புது முகங்களாக இருந்தாலும் அது நடிப்பில் தெரியவில்லை. அஸ்வின் தனது பள்ளிப்பருவத்தில் நடந்த சம்பவங்களை, விஷ்ணு விஷாலிடம் கதையாக விவரிக்கும்போது சுவாரசியம். அஸ்வினை, அவரது சீனியர் மாணவி காதலில் வீழ்த்தும் காட்சியும், பிறகு துரத்தி விடும் காட்சியும் சிரிப்பு + கவர்ச்சி. பெண் அமைப்பினர் கண்டனக்குரல் எழுப்பக்கூடியக் காட்சி! அடுத்தாக, முதல் அத்தியாயம் பிறகு மூன்றாவது அத்தியாயம் என கதை சொல்லும் காட்சிகளில், காமெடிக்கும் பஞ்சமில்லை.
அறிமுக நாயகன் ருத்ரா, சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து நடித்த மிதிலா பால்கரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். இருவரும் காட்சிகளுக்கேற்ற உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துகிறார்கள்.
நடிகராகவே நடித்திருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநராகவே நடித்திருக்கும் மிஷ்கின், இருவரும் திரைக்கதை நகர்வுக்கு பலம் சேர்த்திருப்பதோடு, படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, மிஷ்கினின் ‘க்ளைமாக்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட் காட்சி ரகளை!
ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை, படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பான முறையில் பணிபுரிந்துள்ளனர்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம குமார், இன்றைய இளைஞர்களின் காதல், குடும்ப உறவுகளை புரிந்து கொள்ளும் நிலை, இவற்றின் பின்னணியில் ஜாலியான காதல் படத்தை ரசிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார்.
‘ஓஹோ எந்தன் பேபி’ – இளைஞர்களின் ரசனை!