நன்கு நடிக்கத்தெரிந்த வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நிஜமான அல்சைமர் நோயாளியாக, கைதேர்ந்த நடிப்பினை கொடுத்து கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மையை நிலை நிறுத்தியிருக்கிறார். அதேபோல் ஃபகத் ஃபாசிலும் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார். பைக் திருடும் காட்சியிலும் க்ளைமாக்ஸிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். இருவருமே அவரவர் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.
கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கேற்ப நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில், பாடல்களும், பின்னணி இசையும் பெரிதாக சொல்லும்படியாக இல்லை! சில இடங்களில் மட்டுமே பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
முதல்பாதி எந்த சுவாரசியமுமின்றி, மிக மெதுவாக நகர்கிறது. இடைவேளையின் போது தான் படமே ஆரம்பம் ஆகிறது. அதன் பிறகு சில டிவிஸ்டுகளுடன் க்ளைமாக்ஸ் வரை செல்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார், கிருஷ்ணமூர்த்தி. இன்னும் கூடுதல் சுவாரசியங்களை உருவாக்கியிருக்கலாம். மதுரை சிந்தாமணி தியேட்டர், செகன்ட் ஷோ படம் பர்த்தது போன்ற வசனங்களையும் உள்ளே நுழைத்திருக்கிறார் வடிவேலு.
விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்ல வேண்டிய கதையை, இயக்குநர் சுதீஷ் சங்கர் மிக மெதுவாக சொல்லியிருக்கிறார்.
மாரீசன் தலைப்பு, இந்தப்படத்தின் கதைக்கு வெகுவாக பொருந்தியிருப்பது சிறப்பு!
மொத்தத்தில், ‘மாரீசன்’ பார்க்க பொறுமை வேண்டும்!