சென்னையில் ஆண்களுக்கான விடுதியை நடத்தி வருபவர் ரஜினிகாந்த். இவருடைய நண்பர் சத்யராஜ், விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார். ஒரு நாள் சத்யராஜ் இறந்து விட்டதாக ரஜினிகாந்திற்கு தகவல் வருகிறது. இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் ரஜினிகாந்தை, சத்யராஜின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் விரட்டி அனுப்புகிறார். நண்பர் இறப்பில் சந்தேகம் கொள்ளும் ரஜினிகாந்த், அதற்கான விடையைத் தேடிச்செல்லும் போது பல திடுக்கிடும் தகவல்களும், தனது கடந்த கால வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. அது என்ன? என்பதே கூலி படத்தின் மர்மங்கள் நிறைந்த திரைக்கதை.
இந்திய சினிமாவில், இன்றைய 75 வயதிலும் ரஜினிகாந்த் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை தக்கவைத்தபடி, ஹீரோவாக கடந்த 50 வருடங்களாக வலம் வருவதற்காக அவருக்கு ஒரு பெரிய பாராட்டினையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம்.
ரஜினிகாந்த், படம் முழுவதும் ஆடிப்பாடி, அதிரடியாக சண்டையிடுகிறார். அதே ஸ்டைல், அதே பவர். இந்த விஷயங்களில் அவரது ரசிகர்களை எந்த விதத்திலும் குறை வைக்கவில்லை! ஸ்ருதிஹாசனுடனான காட்சிகளில் எமோஷனலாக நடித்து கண்களை கசிய வைக்கவும் செய்கிறார். நாகார்ஜூனாவுடனான காட்சியிலும் ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார். 1980-களில் சிகரெட்டை துக்கிப்போட்டு வாயில் கவ்வியவர், இந்தப்படத்தில் பீடியை கவ்வுகிறார்.
சர்வதேச கடத்தல்காரர்களில் ஒருவராக நாகார்ஜுனா. கதாபாத்திரத்திற்கேற்றபடி அட்டகாசமாக நடித்திருக்கிறார். மகன் கொல்லப்பட்டபிறகு அவர் பழிவாங்கும் காட்சிகள் டெரர்! க்ளைமாக்ஸில், கப்பலில் ரஜினிகாந்துடன் நடக்கும் உரையாடலிலும், சண்டைக்காட்சிகளிலும் கெத்து காட்டியிருக்கிறார்.
நாகார்ஜுனாவின் வலது கையாக நடித்திருக்கிறார், செளபின் சாஹிர். இவர் படம் முழுவதும் தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திழுக்கிறார். ‘மோனிகா’ பாடலில் இவர் ஆடுகின்ற ஆட்டம் அசத்தல்! ரச்சிதாராமுடனான காட்சிகளிலும், குறிப்பாக நாகார்ஜூனாவின் மகனை கொல்லும் காட்சியிலும் கவனிக்கத்தக்க நடிப்பினை கொடுத்து, படத்தில் நடித்த அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.
சத்யராஜின் மகளாக நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன், அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார். ஏக்கத்துடன், அப்பாவைத் தேடியபடி ரஜினிகாந்திடம் பேசும் காட்சியில் மிகச்சிறப்பான நடிப்பு!
ஒரு சில காட்சிகளில் சத்யராஜ். அவருக்குண்டான காட்சிகளும், நடிப்பும் சுமார்! பெரிதாக எந்த தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை!
உபேந்திரா, க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்கு மட்டும்!
ரச்சிதாராம், சூப்பர் வில்லியாக வந்து ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.
பூஜா ஹெக்டே, ‘மோனிகா’ பாடலுக்கு மட்டும்!
ஆமீர் கான், ஒரு சீன்னாலும் செம்ம சீன்!
ரெபா மோனிகா ஜான், கண்ணா ரவி, மோனிஷா பிளஸ்ஸி, காளி வெங்கட், சார்லி, ஐயப்பா பி சர்மா, ரச்சிதாராம், லொள்ளு சபா மாறன், திலீபன், இயக்குநர் தமிழ், ரிஷிகாந்த் ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்துள்ளனர். இவர்களில் லொள்ளு சபா மாறன் சில காட்சிகளில் சிரிப்பு மூட்டுகிறார்.
ஒளிப்பதிவு, இசை இரண்டும் படத்தினை பிரம்மாண்டப் படுத்தியிருக்கிறது. அதிலும் ’மோனிகா’ பாடல் தியேட்டரை அதிரச்செய்கிறது.
படத் தொகுப்பாளர் பிலோமின்ராஜ், நீளமான காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நவீன தொழில்நுட்பத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்! அவர் இயக்கத்தில் வெளியான, கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தை எட்டிப்பிடிக்கமுடியவில்லை!
மொத்தத்தில் ’கூலி’ ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்விக்கும்!