‘வேஃபேரர் பிலிம்ஸ்’ சார்பில், துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம், ‘லோகா’ – அத்தியாயம் 1 சந்திரா. டோமினிக் அருண் எழுதி இயக்கியிருக்கிறார். இதில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் கே கஃபூர், சந்து சலீம்குமார், அருண் குரியன், சாண்டி உள்ளிட்டோர் நடித்திருக்க, டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இரவு நேரத்தில் மட்டுமே வெளியே வரும் நாயகி கல்யாணி பிரியதர்ஷனை கண்டவுடன் காதல் கொள்கிறார், நஸ்லென் கே கஃபூர். ஓவ்வொரு நாளும் அவருக்கு தெரியாமலே பின் தொடர்கிறார். ஒரு நாள் சட்ட விரோத கும்பலால் கல்யாணி கடத்தப்படும் போது அவரைக்காப்பாற்ற முயற்சிக்கிறார். அப்போது அங்கு நடக்கும் சண்டையில், கல்யாணியின் சுயரூபம் தெரிய வர, மிகப்பெரும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். இந்தப்பிரச்சனக் காரணமாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாண்டி இருவரையும் தேடி வருகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘லோகா’ – அத்தியாயம் 1 சந்திரா திரைப்படத்தின் சுவாரஷ்யமான மீதிக்கதை.
இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட சக்தி கொண்ட, ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கவனம் பெறும் அவர், காதல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.
சன்னி என்ற கதாபாத்திரத்தில் நஸ்லென் கே கஃபூர், எதார்த்தமாக நடித்திருக்கிறார். கல்யாணியின் சுயரூபம் கண்டு மயங்கி விழுவது, அவர் மீது கொண்ட காதலால் உருகுவதுமாக ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார். இவரது நண்பர்களாக நடித்திருக்கும் சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகிய இருவரும் சிரிப்பினை வரவழக்கின்றனர். குறிப்பாக சந்து சலீம் வெடிச்சிரிப்பினை வரவழைக்கிறார்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மிரட்டியிருக்கிறார். வைரஸ் காரணமாக அவரது உடலில் ஏற்படும் மாற்றங்களை சிறப்பாக வெளிப்படுத்தி பயமுறுத்துகிறார்.
படம் ஆரம்பித்த அரை மணி நேரம் எதை நோக்கி கதை பயணிக்கிறது, என்ற குழப்பம் ஏற்படுகிறது. அதன் பிறகு சுவாரஷ்யம் தொற்றிக்கொள்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமானுஷ்ய சக்தி பெற்ற கள்ளியங்காட்டு நீலி கதையை விவரிக்கும் போது மேலும் சுவாரஷ்யம் கூடுகிறது. இந்த புராணக் கட்டுக்கதையோடு, ரேபிஸ் போன்ற வைரஸையும் சேர்த்து ஒரு திகிலான, அமானுஷ்ய ஆக்ஷன் படத்தினை கொடுத்திருக்கிறார், இயக்குநர் டொமினிக் அருண்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக இருக்கின்றன. சண்டைப்பயிற்சியாளர் யானிக் பென்னின் சண்டைக்காட்சிகள், ரசிக்கும்படி இருக்கிறது. எஸ்.எஃப்.எக்ஸ், வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் குறை சொல்லும்படி இல்லை.
இதுபோன்ற பல ஹாலிவுட் படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படமும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது.
‘லோகா’ – அத்தியாயம் 1 சந்திரா – ஜாலியான அமானுஷ்ய மிரட்டல்!