நாயகன் KPY பாலாவும், அவரது நண்பர்களும் இணைந்து ஒரு பாலா ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். KPY பாலாவின் கனவு, லட்சியம் எல்லாமே தனது காதலி நமீதா கிருஷ்ணமூர்த்தியை கல்யாணம் செய்து கொண்டு வசதியாக வாழ வேண்டும். அதற்காக எதையும் சமரசம் செய்து கொள்ளும் மன நிலையில் இருப்பவர்.
பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவுக்காக, சொந்த ஊரை விட்டுவிட்டு, வேறு ஊரில் செக்யூரிட்டியாக வேலை செய்து கொண்டு, அவருடன் வாழ்ந்து வரும் அவர், மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்து வருகிறார். ஒரு நாள் KPY பாலா, நடத்தும் ஒரு 60 வது, திருமணவிழாவில், பாலாஜி சக்தி வேலுவும் அர்ச்சனாவும் கலந்து கொள்கின்றனர். அப்போது அதே போல் திருமணம் செய்து கொள்ள அர்ச்சனாவுக்கும் ஆசை வருகிறது. அதை, பாலாஜி சக்திவேலுவிடம் சொல்கிறார். இதுவரை எதையுமே தன்னிடம் கேட்டிராத மனைவியின் விருப்பத்தினை நிறைவேற்ற முடிவு செய்கிறார். அது நடந்ததா, இல்லையா? என்பதே காந்தி கண்ணாடி.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நகைச்சுவைத் தொடரின் மூலம் பிரபலமானவர் KPY பாலா. சினிமாவில் இதுவரை சிற்சில வேடங்களில் நடித்து வந்த அவர் முதல் முறையாக நாயகனாக நடித்திருக்கும் அவர், தன்னால் முடிந்தவரை நடித்திருக்கிறார். காதல், ஆட்டம், அடிதடி என அனைத்தையும் செய்திருக்கிறார். பாலாஜி சக்திவேலை சுற்றி கதை நகர்வதால் இவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.
KPY பாலாவின் காதலியாக நடித்திருக்கும் நமீதா கிருஷ்ணமூர்த்தி, குறை சொல்லமுடியாத அளவில் நடித்திருக்கிறார்.
வெள்ளந்தியான, ‘காந்தி’ என்கின்ற கதாப்பாத்திரத்திற்கேற்றபடி சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார், பாலாஜி சக்திவேல். அவர் தனது மனைவி அர்ச்சனா மீது காட்டும் அன்பும், பாசமும் நெகிழச் செய்கிறது.
அர்ச்சனாவும் ‘கண்ணம்மா’ கதாப்பாத்திரத்திற்கேற்றபடி சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
KPY பாலாவின் நண்பர்களாக நடித்திருக்கும் நிகிலா, ஷங்கர், ஜீவா சுப்பிரமணியம், அமுதவாணன், மனோஜ் பிரபு உள்ளிட்டோரும் குறை சொல்லும்படி நடிக்கவில்லை.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜாவின் ஒளிப்பதிவும், விவேக் மெர்வின் இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஷெரீப், உணர்வுபூர்வமான கதையை போதிய அழுத்தமின்றி சொல்லியிருப்பதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. பல காட்சிகள் வலுக்கட்டயாமாக புகுத்தப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸூம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.