காயல், இந்தத் திரைப்படமும் காதலுக்கு எதிராக நடக்கும் ஒரு விதமான ஆணவக்கொலையை பேசுகிற படம் தான். மேல் சாதியைச்சேர்ந்த நாயகி காயத்ரி, கீழ் சாதியைச்சேர்ந்த லிங்கேஷை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இதற்கு காயத்ரியின் அப்பாவும், போலீஸ் உயரதிகாரியுமான ஐசக் வர்கீஸ் சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால், அம்மா அனுமோல் எதிர்ப்பு தெரிவிக்கிறார். நாயகி காயத்ரி, அவரது அம்மாவிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மாறாக, எமோஷனல் பிளாக் மெயில் செய்கிறார். அதோடு உறவினர் ஒருவருக்கு காயத்ரியை மணமுடித்து வைக்கின்றனர். அதனால் காயத்ரி தற்கொலை செய்து கொள்கிறார். காயத்ரியின் அப்பா குடிக்கு அடிமையாகவும், அவரின் அம்மா புத்தி பேதலித்தும் இருக்கின்றனர். இந்நிலையில் மகளின் காதல் லிங்கேஷை சந்திக்க, இவர்களுக்குள் நடக்கும் உணர்வு போராட்டங்களை திரைக்கதையாக தொகுத்திருக்கிறார், இயக்குநர் தமயந்தி.
திரைக்கதை முன்னும் பின்னும் நகர்வதால் லேசான குழப்பம் நிலவுகிறது. அதை தவிர்த்திருக்கலாம். ஒளிப்பதிவும், இசையும் படத்தின் பிரதானமாக விளங்குவதோடு ரசிக்கவும் வைக்கிறது. ஜஸ்டினின் இசையமைப்பில் பாடல்கள், எங்கேயோ கேட்ட மாதிரியாக இருந்தாலும் கேட்பதற்கு சுகமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.
தேன் மொழியாக நடித்திருக்கும் காயத்ரி, அளவான நடிப்பின் மூலம் மனம் நிறைகிறார். அவரின் அம்மாவாக நடித்த ஐசக் வர்கீஸூம், அம்மாவாக அனுமோலும் குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்துள்ளனர்.
உணர்வுகளை கொட்டி நடிக்க வேண்டிய கதாபாத்திரம் ஏற்றிருக்கும் லிங்கேஷ் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாம். மன நல மருத்துவராக நடித்திருக்கும் ரமேஷ் திலக், அவரது நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார்.
லிங்கேஷை விரும்பும் பெண்ணாக நடித்திருக்கும் ஸ்வாகதா கிருஷ்ணன், துறு துறு நடிப்பின் மூலம் இளைஞர்களை எளிதாக கவர்ந்து விடுகிறார்.
அறிமுக இயக்குநர் தமயந்தி, காதலில் சாதிய குறுக்கீடு பற்றி ஒரு டீசன்ட்டான படத்தினை கொடுத்திருக்கிறார். ஆனால், அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.