‘பாபி டச் கோல்டு யுனிவர்சல்’ பிரைவேட் லிமிடட் என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடிகர் ரவி மோகன் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது இதற்கான அவருக்கு ரூ 12 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ 6 கோடி முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. முன்பணத்தை வாங்கிவிட்டு ரவி மோகன் இதுவரை படமும் நடித்து கொடுக்கவில்லை வாங்கிய முன்பணத்தையும் திருப்பி தரவில்லை என அந்நிறுவனத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் ரவி மோகன் புதிய படத்தின் தயாரிப்பு வேலைகளை தொடங்கியுள்ள நிலையில், வாங்கிய முன்பணத்தை வட்டியுடன் திருப்பி தரக் கோரி இந்த மனுவில்குறிப்பிட்டு இருந்தார் . இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் ரவிமோகனுக்கு ரூ. 6 கோடிக்கு சொத்து உத்தர வாதத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். சொன்ன தேதிக்குள் சொத்து உத்தரவாதத்தை நடிகர் ரவி மோகன் சமர்பிக்காததால் அவரது சொத்துக்களை முடக்க மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கியது.
இதனால் ரவி மோகனின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என்கிற நிலை உருவானது.தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த பின் ரவி மோகன் தற்போது தனியாக வாடகை வீட்டில் வசித்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்,நடிகர் ரவி மோகனின் இசிஆர் பங்களா வீட்டில் வங்கிக் கடன் தவணையை 10 மாதங்களாகச் செலுத்தாததால், வங்கி நிர்வாகம் ரவிமோகனுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பியதாகவும் அந்த நோட்டீ ஸை ரவி மோகன் தரப்பு வாங்க மறுத்து, வங்கியில் வந்து பெற்றுக்கொள்வதாகக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கி ஊழியர்கள் ஜப்தி நோட்டீஸை நடிகர் ரவி மோகனின் ‘இசிஆர் பங்களா’ வீட்டில் ஒட்டி விட்டு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.