ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாக, நாயகியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். இவர்களுடன், நண்டு ஜெகன், முனீஷ்காந்த், ஆர். சுந்தர்ராஜன், ஹரிஷ் பெராடி, மாலா பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அதர்ஸ் திரைப்படத்தை, ‘கிராண்ட் பிக்சர்ஸ்’ (Grand Pictures) நிறுவனம் மற்றும் ‘அப் 7 வெஞ்சர்ஸ்’ ஆதிராஜ் புருஷோத்தமன் இணைந்து தயாரித்துள்ளனர். கதை எழுதி, இயக்கியிருக்கிறார், அபின் ஹரிஹரன். ஒளிப்பதிவு, அரவிந்த் சிங். இசை.
‘அதர்ஸ்’ திரைப்படம் ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லர். இரவு நேரத்தில், திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு விபத்தை, காவல்துறை அதிகாரி விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன. அது என்ன என்பதை பரபரப்பாகவும், விறுப்பாகவும் சொல்வது தான், அதர்ஸ் திரைப்படத்தின் கதை. ‘அதர்ஸ்’ தலைப்பு அத்திரைப்படத்தின் கதைக்கு சரியாக பொருந்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன், முதல் காட்சியிலேயே தான் யார் என்பதை வெளிப்படுத்தி, ஒரு நல்ல இயக்குநராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். காட்சிகளின் வேகமும், மர்ம முடிச்சுகளும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. இப்படி எல்லாம் ஒருவன் செய்யத்துணிவானா?! என்ற கேள்விக்கு காரணமாக அவனுடைய உளவியல் பிரச்சினையை, இயக்குநர் சுட்டிக்காட்டியிருப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ளமுடியாது. சைக்கோ, த்ரில்லர், மர்டர் வகையான படங்களை அதிகம் விரும்ப்பிப் பார்ப்பவர்களுக்கு இது பிடிக்கலாம்! அபின் ஹரிகரனின் வித்தியாசமான திரைக்கதைக்கு, பக்கபலமாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கும், இசையமைப்பாளர் ஜிப்ரானும் வேலை செய்துள்ளனர். கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், காட்சிகளில் இன்னும் பரபரப்பு உருவாகியிருக்கும்.
ஆதித்யா மாதவன், நல்ல தோற்றத்துடன் இருக்கிறார். போலீஸ் உயரதிகாரியாகவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் சில இடங்களில் வேண்டுமென்றே மாட்டிக்கொள்வது போல் சித்தரிக்கப்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். அவர் போலவே, பிற போலீஸூம் நடந்து கொள்வது படத்தின் பலவீனமாக இருக்கிறது. மற்றபடி, ஒரு ஓகேவான க்ரைம் த்ரில்லரை கொடுத்திருக்கிறார், இயக்குநர்.
கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் இருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கும்படி நடித்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டராக அஞ்சுகுரியன். சண்டைக்காட்சிகளில் சீறி பாய்ந்திருக்கிறார். கௌரி கிஷன் தன்னை மருத்துவராகவே பாவித்துள்ளார். அவர் நடித்துள்ள காட்சிகளில் சிறப்பு கவனம் பெறுகிறார்.
சில காட்சிகளில் நடித்த நண்டு ஜெகன், வித்தியாசமான மிரட்டல் நடிப்பில் கூடுதல் கவனம் பெறுகிறார், முனீஷ்காந்த், சில இடங்களில் கடுப்பேற்றுகிறார். மற்றபடி ஆர். சுந்தர்ராஜன், ஹரிஷ் பெராடி, மாலா பார்வதி உள்ளிட்டோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
கதாநாயகனை உயர்த்திப்பிடிக்காமல், கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. முதல் பாதியில் மிக விறுவிறுப்பாகப் படம் நகர்கிறது. இரண்டாம் பகுதியில் சற்று சுணக்கம் ஏற்படுகிறது. குற்றவாளி தான் செய்யும் கொலைகளுக்கு நியாயம் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
‘அதர்ஸ்’ த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்காக எடுக்கப்பட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது.