ஆனந்தராஜ், சம்யுக்தா, ஆராத்யா, முனிஷ்காந்த், தீபா, சசிலயா, ஷகீலா, ராம்ஸ், ரங்கநாதன், மிப்பு உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், மதறாஸ் மாஃபியா கம்பெனி. வி.சுகந்தி அண்ணாதுரை கதை எழுதியிருக்க, அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கியிருக்கிறார்.
வடசென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கதை நிகழ்கிறது. ரௌடித்தொழிலை, கார்ப்பொரேட் கம்பெனிக்கு நிகராக நடத்தி வருபவர் (ஆனந்த்ராஜ்) பூங்காவனம். சென்னையின் பல்வேறு பகுதிகளில் ரௌடிகளை, அந்தந்த பகுதியின் தலவர்களாக நியமித்து பல விதமான குற்றச்செயல்களை செய்து வருகிறார். உடன் இருப்பவர்களில் சிலர் அவரை கொல்ல முயற்சிக்கின்றனர். போலீஸ் ஏசிபி (சம்யுக்தா) இவரை உயிருடனோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ முயற்சிக்கிறார். இந்நிலையில் பூங்காவனம் என்ன செய்தார். என்பதே லாஜிக்கில்லாமல் கலகலப்பாக சொல்லப்பட்ட மதறாஸ் மாஃபிய கம்பெனி.
ஊரே மிரளும் ரௌடியாக வலம் வந்தவர்கள், செத்த பின்னர் சமூகத்தில் அவர்களுக்கு என்ன மாதிரியான மரியாதை கிடைக்கிறது. என்பதை, சிரிக்கும்படியும் சிந்திக்கும் வண்ணமும் படமாக்கியிருக்கும் கதை எழுத்தாளர் வி.சுகந்தி அண்ணாதுரைக்கும், இயக்க்கியிருக்கும் ஏ.எஸ்.முகுந்தனுக்கும் பாராட்டுக்கள்.
பூங்காவனம் எனும் டானாக நடித்திருக்கும் ஆனந்த்ராஜ், வழக்கம்போல் மிரட்டலாகவும், கலகலப்பாகவும் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறார். தனது மனைவி தீபாவிடமும், அவரது மகனிடமும் படும் பாடு சூப்பர். ஊரே மிரளும் டானை அவரது மகன் அசால்ட்டாக கலாய்த்து விடுகிறார். தீபா, சென்னை பாஷையை நன்றாகவே பேசியிருக்கிறார்.
அவரது மனைவிகளாக தீபாவும், சசிலயாவும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர். ஆனந்தராஜை, எப்படியாவது பிடித்து விடவேண்டும். என்ற நோக்கில் செயல்படும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சக்யுக்தா, காக்கி உடையில் கம்பீரமாக இருக்கிறார். ஒரு சண்டைக்காட்சியில் அசர வைக்கிறார். முனீஷ்காந்த் கொண்டித்தோப்பு வரதன் கதாபாத்திரத்தில், பல இடங்களில் கடி. சில இடங்களில் சிரிப்பினை வரவழைக்கிறார். ஆனந்தராஜ் – சசிலயா ஆகியோரின் மகளாக நடித்திருக்கும் ஆராத்யா, கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை. ஒளிப்பதிவு அசோக்ராஜ். இருவரது பணியும் குறை சொல்லும்படி இல்லை. அஷ்மிதாவின் குத்து பாடல் தாளம் போட வைக்கிறது.
ரௌடிகளை, சூப்பர் ஸ்டார்களாக சித்தரித்து படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், ரௌடிகளை யோசிக்க வைக்கும் வகையில்,
கதை எழுதியிருக்கும் வி.சுகந்தி அண்ணாதுரை, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் ஆகியோரை பாராட்ட வேண்டும்.